“கடமையுணர்வுடன் நேர்மையாக பணியாற்றுவோம்!” திருச்சி மாநாட்டில் உறுதிமொழி ஏற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள்!!!
வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என்ற பாகுபாடு பாராமல், நேர்மையாகவும், கடமையுணர்வுடனும் பணியாற்றுவோம் என திருச்சியில் நடந்த மாநாட்டில் திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உறுதி மொழி எடுத்தனர்.
சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதும் இதை கொண்டாடும் வகையில், உள்ளாட்சியில் வெற்றி திமுக பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாடு திருச்சியில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாயின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சுமார் 6 ஆயிரம் பிரதிநிதிகள் உட்பட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தாம் எழுதிய கடிதத்தை பரிசாக வழங்கி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திமுகவின் மீது வைத்துள்ள நம்பிக்கையால், உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் வாக்களித்து அமோகமாக வெற்றி பெறச் செய்துள்ளனர். அதிமுக அரசின் பண பலம், தேர்தல் ஆணையத்தின் அதிகார துஷ்பிரயோகத்தை மீறி தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றி சாதாரண வெற்றியல்ல மிகப்பெரிய வெற்றி.
தேர்தலில் வெற்றி பொறுப்பேற்றுள்ள நீங்கள்,ஊழலுக்கு இடம் அளிக்காமல் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும்.
இந்த செயல்பாடு, 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெற்றியைத் தேடித் தரும் என்பது உறுதி என மு.க.ஸ்டாலின் பேசினார்.
தொடர்ந்து, வெற்றி பெற்று பதவியேற்கும் போது ஏற்கனவே உறுதி மொழி எடுத்திருப்பீர்கள். இப்போது மாநாட்டிலும் நீங்கள் ஒரு உறுதி மொழி ஏற்க வேண்டும் எனக் கூறி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரையும் உறுதி மொழி ஏற்க வேண்டும் என்பது எனது கண்டிப்பான, அன்பான வேண்டுகோள் என மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
அதன்படி, அண்ணா, கலைஞர் வழியில் கடமை, கட்டுப்பாடுடன் செயல்படுவோம். வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என்று பாகுபாடு பாராமலும், நேர்மையாகவும், கடமையுணர்வுடனும் சிறப்பாக பணியாற்றுவோம். என்றென்றும் மக்களுடன் இணைந்து பணியாற்றி மக்களின் மனங்களை வெல்வோம் என மு.க.ஸ்டாலின் உறுதி மொழி வாசகங்களை படிக்க, உள்ளாட்சி பிரதிநிதிகள் எழுந்து நின்று உறுதிமொழி ஏற்றது மாநாட்டின் ஹைலைட்டாக அமைந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




