ஹைட்ரோ கார்பன் திட்டம் : மத்திய அரசின் முடிவில் மாற்றம் இல்லை..! அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திட்டவட்டம்!!
ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறத் தேவையில்லை என்ற முடிவில் மாற்றமில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் அப்பகுதி விவசாயிகளும், அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டனர். சுற்றுச்சூழலை பாதிக்கும் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் இத்திட்டம் செயல்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறத் தேவையில்லை என்று மத்திய அரசு சமீபத்தில் திடீரென அறிவித்தது. மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு கருத்துக் கணிப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இதனால் ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரம் மீண்டும் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்தது. திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தமிழக அரசும் இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், தமிழக அரசை ஆலோசிக்காமல், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி தேவையில்லை என மத்திய அரசு முடிவு செய்ததை திரும்பப் பெற வேண்டும் என கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், மத்திய அரசோ தமிழகa ரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்ற மத்திய அரசின் முடிவில் மாற்றம் இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




