--- --:--:-- --

நாளை குடியரசு தின விழா கொண்டாட்டம் : டெல்லியில் வரலாறு காணாத உச்சகட்ட பாதுகாப்பு!!

IMG-20200125-WA0075

நமது நாட்டின் 71-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

இந்தாண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயர் போல்சோனரா பங்கேற்கிறார். குடியரசு தினத்தன்று, ஆண்டுதோறும் டெல்லியில் ராஜபாதையில் இருந்து செங்கோட்டை வரை 8 கி.மீ. தூரத்துக்கு இந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் ஆயுத தளவாட அணிவகுப்பும், முப்படை வீரர்களின் அணிவகுப்பும், கலாசார பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும், வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம்.

 

நாளை குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிடுகிறார். விழாவில் பிரேசில் அதிபர் ஜெயர் போல்சோனரா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

 

இந்நிலையில் குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் என சந்தேகம் நிலவுகிறது. இதனால் டெல்லியில் 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் துணை ராணுவப்படையை சேர்ந்த ஏராளமான வீரர்களும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

டெல்லி முழுவதும் நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. . மெட்ரோ நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், விமான நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் உதவியுடன் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதேபோல், அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon