--- --:--:-- --

பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு ..! மிரட்டல்களுக்கு அஞ்ச வேண்டாம்..! ரஜினிக்கு எச்.ராஜா ஆதரவு!!

6

பெரியார் குறித்து பேசியதற்காக எழும் மிரட்டல்களுக்கு எல்லாம் அச்சப்பட வேண்டாம் என ரஜினிக்கு ஆதரவாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குரல் கொடுத்துள்ளார்.

 

சூப்பர் ஸ்டார் ரஜினி திரையில் பஞ்ச் வசனம் பேசினாலும் சரி.. நிஜத்தில் திருவாய் மலர்ந்து கருத்து கூறினாலும் சரி.. அவை உடனே பரபரப்பாகவும், சர்ச்சையாகவும் வெடித்து விடுவது வாடிக்கையாகி விடுகிறது. இது இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே தொடர்கிறது .1995-ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகிவிட்டது என ரஜினி கூறியது பெரும் பரபரப்பாகி, அடுத்து வந்த தேர்தலில் அதிமுக படுதோல்வியை தழுவ காரணமாகி விட்டது.

 

சமீபகாலமாக ரஜினி கூறி வரும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் அவருக்கு எதிராகவே திரும்பி விடுகிறது . அதிலும் கடந்த வாரம் துக்ளக் விழாவில் ரஜினி பேசியது தான் பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. முரசொலி வைத்திருப்பவர் திமுக காரர்; துக்ளக் வைத்திருப்பவர் அறிவாளி என்று ரஜினி பேசியதற்கு திமுக தரப்பில் மட்டுமின்றி பல தரப்பினரும் ரஜினிக்கு பதிலடி கொடுத்து வருவதுடன் கிண்டலாக விமர்சித்து வருகின்றனர்.

 

அதே துக்ளக் விழாவில், 1971 -ல் பெரியார் நடத்திய தி.க.மாநாட்டு பேரணியில் ராமர், சீதை சிலைகளை நிர்வாணமாக கொண்டு சென்று செருப்பு மாலை அணிந்து அவமதிப்பு செய்ததாக ரஜினி பேசியது பெரியார் இயக்கத்தினரை கொந்தளிக்கச் செய்துள்ளது. நடைபெறாத ஒன்றை பேசிய பெரியாரை அவமதித்ததற்காக ரஜினி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் தர்பார் திரைப்படம் நடைபெறும் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்துவோம் என ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமன்றி ரஜினிக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் போலீசில் புகாரும் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த விவகாரத்தில் ரஜினி எந்த விளக்கமும் தராமல் அமைதி காத்து வருகிறார். இந்நிலையில் ரஜினிக்கு ஆதரவாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா குரல் கொடுத்துள்ளார்.காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, துக்ளக் விழாவில் பேசியதற்காக எழுந்துள்ள மிரட்டல்களுக்கு ரஜினி அச்சப்படத் தேவையில்லை. அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டாலும் வழக்குப்பதிவு செய்ய முடியாது என்று எச். ராஜா ரஜினிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon