‘பைசா செலவில்லாமல் ஆபரேஷன்’ – சிறுவனை காத்த அரசு மருத்துவர்கள்
காய்ச்சலோ, தலை வலியோ இல்லை. ஏதோ ஒரு சிறிய அறுவை சிகிச்சை என எதுவாக இருந்தாலும் நாம் உடனடியாக செல்வது தனியார் மருத்துவமனைக்கு தான். ஏன் அரசு மருத்துவமனைக்கு செல்வதில்லை? அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன, என்றாலும் ஏழை எளியோருக்கு எப்போதும் கை கொடுப்பது அரசு மருத்துவமனை தான்.
தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சத்தமில்லாமல் பல சாதனைகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எதுவும் வெளியே தெரிவதில்லை. அப்படி ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை செய்து சிறுவன் ஒருவனுக்கு மறுவாழ்வு கொடுத்திருக்கிறார்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள். இதனை அந்த மருத்துவமனையில் டாக்டரான பிரகாஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் 12 வயது சிறுவனை வயிற்றுவலி பிரச்சினைக்காக பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி இருந்தார்கள். பரிசோதனையில் அவருடைய வயிறு வீங்கி இருந்தது. இதயத்துடிப்பு மிக அதிகமாக இருந்தது. மேலும் நீர்சத்து குறைந்து ஷாக் என்ற நிலையில் அவன் இருந்தால். உடனே அவனுக்கு நரம்பு வழியாக குளுக்கோசும் ஆண்டிபயோடிக் மருந்துகளை செலுத்தி ரத்த அழுத்தத்தை சரி செய்தோம்.
மேலும் வயிறு வீங்கி போனது தொடர்பாக ஸ்கேன் எடுத்ததில் குடல் அடைப்பு இருந்தது தெரியவந்தது. ஆனால் காரணம் தெரியவில்லை என்றும் தெரியவந்தது. ரிஸ்க் அனைத்தையும் தெளிவுபடுத்தி விட்டு அறுவை சிகிச்சைக்கு தயார் செய்தோம். வயிற்றை கிழித்தவுடன் சுமார் ஒரு லிட்டர் ரத்தம் வெளியே வந்தது. பின்னர் குடல் அழுகி இருப்பதை கண்டுபிடித்தோம்.

சிறுகுடல் கிட்டத்தட்ட 100 சென்டிமீட்டர் அழுகிகியிருந்தது. அழுகிப் போன குடலை வெட்டி எடுத்துவிட்டு சிறு குடலையும், பெரு குடலையும் ஒன்றோடு ஒன்று சேர்க்கும் அறுவை சிகிச்சை செய்தோம். குடல் அழுக காரணம் வாழ்வுலஸ் என்று கண்டுபிடித்தோம். அப்படி என்றால் ரத்த ஓட்டம் தடைபட்டு குடல் அழுகிப் போவது என்று அர்த்தம்.
அறுவை அரங்கம் முழுவதும் மூன்று நாட்களுக்கு துர்நாற்றம் வீசியது. குடல் அறுவை சிகிச்சை செய்தால் ஐந்து நாட்களுக்கு உணவு கிடையாது. ஐசியூவில் வைத்து இரவு, பகலாக பயிற்சி மருத்துவரும், செவிலியர்களும் கவனித்துக் கொண்டார்கள். மேலும் மெதுவாக உடல் தேறியது. ஆறாவது நாள் காற்று பிரிந்த பிறகு தண்ணீரும் இளநீரும் கொடுக்க ஆரம்பித்தோம்.
சிறுகுடல் 80% இல்லாததால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மிக சிரமம் ஏற்பட்டது. ஒன்பதாம் நாள் இட்லி, சாதம் ஆரம்பித்தோம். பதினோராம் நாள் யாரும் எதிர் பார்க்காத ஒன்று நடந்தது. தையல் போட்ட தொப்புள் பகுதியில் இருந்து மலம் வர ஆரம்பித்தது. உள்ளே தைத்து வைத்த தையல் விட்டு போய் விட்டது என்று அர்த்தம். மலம் வருவதை பார்த்து சிறுவனின் அம்மா கதறி அழுதார்.
பிறகு அறுவை சிகிச்சை இல்லாமல் நரம்பு மூலமாக சத்து மருந்து மற்றும் உணவில் உள்ள சத்துகள் கலந்து விசேஷ நரம்பு மருந்துகள் செலுத்தியதில் தொப்புள் அருகே வந்த மலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. ஒரு கட்டத்தில் நார்மலாக மலம் கழிக்க ஆரம்பித்தார். உடல் தேறி இன்று வீட்டுக்குப் போகிறார் தம்பி. இது மறுபிறவி. கிட்டத்தட்ட 25 நாட்கள் எங்களுடைய வார்டில் இருந்துள்ளான்.
இவர்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவு கிடையாது. இந்த அறுவை சிகிச்சை மற்றும் கவனிப்பின் மதிப்பு தனியார் மருத்துவமனையில் 10 முதல் 12 லட்சம் ரூபாய் வரை ஆகும். அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசம். இதுபோல அரசு மருத்துவமனையில் பல உயிர்கள் வருடம் முழுவதும் காப்பாற்றப்படுகிறது. என்ன ஒன்று, இதை யாரும் வெளியே சொல்வதில்லை. விளம்பரம் செய்வதும் கிடையாது என பதிவிட்டுள்ளார் .





