மேட்டூர் அணை நீர்மட்டம் , மீண்டும் சரிவு ஆரம்பம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் , கடந்த 43 நாட்களாக முழு கொள்ளவான 120 அடியிலேயே நீடித்த நிலையில், நீர் வரத்து குறைவாலும், நீர் திறப்பு அதிகரிப்பாலும், இரு நாட்களாக சரியத் தொடங்கியுள்ளது.
கர்நாடகாவில், நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால், கடந்த ஆகஸ்ட் மாதம் காவிரியில் வெள்ளமென நீர் பாய்ந்து வந்தது. இதனால் மேட்டூர் அணை இந்த ஆண்டு மட்டும் 4 முறை முழுக் கொள்ளவை எட்டியது. டெல்டா பாசனமும் செழித்தது. தொடர்ந்து தமிழகத்திலும் மழை வெளுத்து வாங்கத் தொடங்கியது. இதனால் டெல்டா பகுதிகளில் பாசனத்திற்கான மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.
எனவே கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி 4 – வது முறையாக அணை நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 120 மீண்டும் எட்டியது. அணைக்கு வரத்தும், நீர் வெளியேற்றமும் சமமாக இருந்ததால், கடந்த 43 நாட்களாக நீர் மட்டம் முழுக் கொள்ளளவிலேயே இருந்து, இந்த ஆண்டு சாதனை படைத்தது.இந்நிலையில் தற்போது நீர்வரத்து குறைய ஆரம்பித்ததாலும், டெல்டா பாசனத்திற்கு தேவை அதிகரித்ததாலும் அணையின் நீர்மட்டமும் கடந்த 2 நாட்களாக படிப்படியாக சரியத் தொடங்கி விட்டது.
இன்று காலை நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,881 கன அடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், அணை நீர்மட்டம் 118.79 அடியாகவும், நீர் இருப்பு 91.55 டி.எம்.சி ஆகவும் சரிந்துள்ளது. நெற்பயிர்கள் வளர்ந்து கதிர்விடத் தொடங்கி விட்டதால் இந்த ஆண்டு டெல்டா பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு அறவே இருக்காது என்ற மகிழ்ச்சியில் விவசாயிகள் உள்ளனர்.





