--- --:--:-- --

மின்வெட்டை சமாளிக்க 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்!

10

தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. சென்னை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இரவு நேர மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் மின்சார வாரிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அறிவிக்கப்படாத மின்வெட்டுகளால் தொழில், விவசாயத்துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 

தொடர் மின்வெட்டு புகாரை அடுத்து, செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகமான மின்னகத்தில் முதலமைச்சர் விஜய் நேரில் சென்று ஆய்வு செய்தார். மின்வெட்டு தொடர்பான புகார்கள் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள் குறித்தும், மின் உற்பத்தி, கொள்முதல் செய்யப்படும் மின்சாரம் ஆகியவை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

 

 

இதன் தொடர்ச்சியாக, மின்துறை சேவைகள் தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் “TNEB WhatsApp Chatbot” வசதியை அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், மின்சார புகார்களை பதிவு செய்ய 94987 94987 என்ற வாட்ஸ் அப் எண்ணில் “HI” என பதிவிட வேண்டும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

 

 

இந்த நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் வெட்டை சமாளிக்க மின்சாரத்தை வெளி சந்தையில் இருந்து கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் டெண்டர் வெளியிட்டுள்ளது. 4,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. வருகிற 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

 

 

பீக் ஹவர்ஸ் எனப்படும் பிற்பகல் 6 மணி – நள்ளிரவு 12 மணி வரை தேவையான 3,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தேவையான 1,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon