--- --:--:-- --

கொடைக்கானலில் 50 சென்ட் அரசு நிலத்திற்கு உரிமை கோரிய விஜய்!

1

கொடைக்கானலில் வில்பட்டி கிராமத்தில் உள்ள 50 செண்ட் அரசு புறம்போக்கு நிலத்திற்கு முதல்வர் விஜய் உரிமை கொண்டாடி வருவதாகவும், சென்னை பாடியில் இருந்த தனது சொத்தை ரூ35க்கு விற்றுவிட்டு, இது ரூ7 கோடி மதிப்பிலான சொத்து என்று தவறாக குறிப்பிட்டுள்ளார் என்று தேர்தல் மனுதாரர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றசாட்டியுள்ளார்.

 

 

இது குறித்து தி இந்து வெளியிட்டுள்ள செய்தியில், முதல்வர் விஜய் மீது குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் நிலுவையில் உள்ளது. பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளரான எஸ். தினேஷ் என்பவர், தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், முதல்வர் விஜய் தனது 2026 தேர்தல் வேட்புமனுத் தாக்கல் உறுதிமொழிப் பத்திரத்தில் தெரிந்தே திட்டமிட்டு தகவல்களை மறைத்தல், தவறாகப் காட்டுதல், மற்றும் தவறான அறிவிப்புகளைச் செய்ததற்காக அவரது தேர்தலைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

 

இது குறித்து மனுதாரரின் வழக்கறிஞர் வி.ஆர். சண்முகநாதன் கூறுகையில், முதல்வர் விஜய் கடந்த 1997-ம் ஆண்டு கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தை ரூ30,000 கிரயத் தொகைக்கு வாங்கியதாகவும், அந்த அந்தச் சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ20 லட்சம் என்றும் கூறியிருந்தார். ஆனால் அந்த கிராம ‘அ’ பதிவேட்டை ஆய்வு செய்தபோது அந்தச் சொத்து உண்மையில் அரசு புறம்போக்கு நிலம் என்பது தெரியவந்தது என்று கூறியுள்ளார்.

 

 

அதேபோல், 2010-ம் ஆண்டு சென்னை போரூரில் 33,955 சதுர அடி பரப்பளவு கொண்ட விவசாயம் அல்லாத நிலத்தை ரூ9.13 கோடிக்கு வாங்கியதாக குறிப்பிட்டார். ஆனால், பதிவுத் துறை ஆவணங்களை ஆய்வு செய்ததில், அவர் அந்த நிலத்தை ரூ7.5 கோடிக்கு 20,773 சதுர அடியை மட்டுமே வாங்கியுள்ளது தெரியவந்தது. இதில் நிலத்தின் பரப்பளவு மற்றும் விற்பனைத் தொகையை அதிகமாக அறிவித்ததற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

 

 

சென்னை பாடியில் ரூ7 கோடி மதிப்பிலான 11,854 சதுர அடி வணிகக் கட்டடம் தமக்குச் சொந்தமானது என்றும், அதை 2009-ல் ரூ1.95 கோடிக்கு வாங்கி, கட்டுமானத்திற்கு ரூ3.9 கோடி செலவிட்டதாகவும் கூறியிருந்தார். ஆனால், 23,460 சதுர அடி கட்டடப் பரப்பு கொண்ட அந்த வணிகக் கட்டடத்தை பிப்ரவரி 12, 2026 அன்று ரூ35 கோடிக்கு அவர் விற்றுவிட்டார். தேர்தல் உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிட்டது போல் அவர் 2009-இல் அந்த வணிகச் சொத்தை வாங்கவில்லை.

 

 

மாறாகத் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து தமது கொரட்டூர் சொத்திற்குப் பதிலாகப் பரிமாற்றமாகப் பெற்றார் என்று நீதிமன்றத்தில் மனுதாரர் கூறியுள்ளார். மேலும், அந்தச் சொத்து பரிமாற்றப் பத்திரத்தின் மூலம் பெறப்பட்டது என்பதையும், தேர்தல் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்வதற்கு முன்பே அந்த சொத்து ரூ35 கோடிக்கு விற்கப்பட்டுவிட்டது என்பதையும் முதல்வர் விஜய் தெரிவிக்கவில்லை என்று மனுதாரர் கூறினார்.

 

 

அதேபோல் சென்னையில் உள்ள நீலாங்கரை பங்களா அவரது பரம்பரைச் சொத்து அல்ல. விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், கடந்த 2003-ல் சுமதி ரகுநாத் கைடோண்டே என்பவரிடமிருந்து வாங்கி, 2005-ல் தமது மகனுக்குச் செட்டில்மென்ட் செய்து கொடுத்துள்ளார். அந்தச் செட்டில்மென்ட் பத்திரத்தில், தந்தை எவ்வித கிரயத் தொகையும் பெறாமல் அன்பு மற்றும் பாசத்தின் காரணமாக மகனுக்கு அந்தச் சொத்தைக் கொடுப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

17,100 சதுர அடி நிலப்பரப்பு மற்றும் 5,500 சதுர அடி கட்டடத்தைக் கொண்ட அந்தச் சொத்தின் மதிப்பு ரூ2.75 கோடி என 2005 செட்டில்மென்ட் பத்திரத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தமது 2026 தேர்தல் உறுதிமொழிப் பத்திரத்தில், அந்த நிலத்தில் 18,633 சதுர அடி கட்டடப் பரப்பை எழுப்ப ரூ18.73 கோடி செலவிட்டதாகவும், தற்போது அந்தச் சொத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ20 கோடி என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார்.

 

 

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள முதல்வர் விஜய், நீண்ட விசாரணை நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளாமல், இந்தத் தேர்தல் மனுவை ஆரம்பக் கட்டத்திலேயே நிராகரிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும், தேர்தல் மனுவில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய், அடிப்படை ஆதாரமற்றவை, மற்றும் முற்றிலும் தவறான புரிதலால் ஆனவை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் தேவையான விவரங்கள் எதுவும் இல்லை என்றும், அவை யூகங்கள் மற்றும் ஊகங்களின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

 

மேலும், முழுத் தேர்தல் மனுவும் எனது படிவம் 26-ஐ மிக நுட்பமாகப் பகுப்பாய்வு செய்து, அதில் அறிவிக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் முக்கியமா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், சொத்துக்கள் வாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது. முழுத் தேர்தல் மனுவின் உள்ளடக்கங்களும் உண்மை மற்றும் சரியானது என்று வைத்துக்கொண்டாலும் (ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும்), அது எந்தவொரு வழக்கு மூலத்தையும் வெளிப்படுத்தாது,” என்று தெரிவித்துள்ளார்.

 

 

இது குறித்து விஜய் நீதிமன்றத்தில் கூறுயதாவது: இந்த கற்பனையான தவறுகள் தேர்தலின் முடிவை எந்த விதத்திலாவது பாதித்துள்ளனவா என்பதைக் காட்ட (தேர்தல் மனுதாரரால்) எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. பெரம்பூர் தொகுதி மக்களுக்குத் தான் ஒரு புகழ்பெற்ற சினிமா நடிகருக்கும், மிகச் சிறந்த மனிதருக்கும், ஒரு யதார்த்தமான, நேர்மையான மற்றும் நம்பிக்கை அளிக்கும் அரசியல் மாற்றை வழங்கிய ஒருவருக்கும் வாக்களிக்கிறோம் என்பது தெரிந்தே இருந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon