தெருத் தெருவாக செல்லும் முதல்வர் விஜய் – சிபிஎம் சண்முகம்
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. வரும் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
அதன்படி மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் இன்று சுமார் 45 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடத்துகிறார். இதேபோல், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாராபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து ரோடு ஷோ மற்றும் பரப்புரையில் ஈடுபடுகிறார். மேலும், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் சலீமை ஆதரித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதற்கிடையில் புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், “தேர்தல் களம் சாதகமாக இல்லாததால்தான் முதல்வர் விஜய் தெருத் தெருவாக செல்ல வேண்டிய அளவுக்கு நிலைமை இருக்கிறது” என விமர்சித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியதாவது, “தவெகவுக்கு தேர்தல் களம் சாதகமாக இல்லை எனும் காரணத்தினால்தான், முதலமைச்சர் இப்படி தெருத் தெருவாக செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. போட்டி கடுமையாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
தேர்தலில் வென்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்ற 20 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்தது என்பது தொகுதி மக்களுக்கு மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே இரண்டு தொகுதிகளிலும், வேட்பாளர்களை மக்கள் விரட்டி அடிக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன.
இவர்கள் செய்தது நேர்மையற்ற செயல். இப்படியான ஒரு சம்பவத்தை நாம் கேள்விப்பட்டதே இல்லை. இந்த இடைத் தேர்தல் என்பது தவெகவால் திணிக்கப்பட்டுள்ள தேர்தல். தவெக தரப்பில் இருந்து அவர்களுக்கு எந்த ஒரு வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்றால், அவர்கள் ராஜினாமா செய்திருக்க வாய்ப்பே இல்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




