--- --:--:-- --

மதுராந்தகத்தில் வாக்குக்கு பணம் கொடுக்கிறது தவெக!

13

தூய சக்தி என கூறிக்கொண்டு ஓட்டுக்கு பேரம் பேசும் நிலையை வாக்காளர்கள் மத்தியில் தவெக ஏற்படுத்தியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் விமர்சனம் செய்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், சென்னை வள்ளலார் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சண்முகம், வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

 

செய்தியாளர்கள் சந்திப்பில் சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியதாவது; “மதுராந்தகத்தில் பல கிராமங்களுக்குச் சென்று இருந்த பொழுது நாங்கள் வெறும் நோட்டீஸ் மட்டுமே கொடுக்கிறோம். எதற்காக போட்டியிடுகிறோம் ஏன் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு தான் வாக்கு சேகரிக்கிறோம். ‘மற்றவர்கள் எல்லாம் பணம் கொடுக்கிறார்கள். நீங்கள் தான் நோட்டீஸ் கொடுக்கிறீர்கள்’ என்று சில கிராமங்களில் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

 

 

நான் யாரெல்லாம் பணம் கொடுக்கிறார்கள் எந்த கட்சி என்று கேட்ட போது தமிழக வெற்றி கழகம் தான் அதிக அளவில் பணம் கொடுக்கிறார்கள் என்று மக்கள் கூறுகிறார்கள். தூய சக்தி என்று கூறிக்கொண்டு வாக்குக்கு பேரம் பேசுகின்ற நிலைமையை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். இதற்கு சம்பந்தப்பட்ட தலைவர்களும் பதில் கூற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

 

இதனிடையே, சென்னை கே.கே. நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஒரு கலாசாரமாக மாறிவிட்டதாக சாடினார். மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ்குமார் விலகும் வரை இடதுசாரிகளின் போராட்டம் தொடரும் என்றும் வீரபாண்டியன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon