பயணிகளுக்கு கட்டணமில்லா டிக்கெட் கொடுத்த முதலமைச்சர் விஜய்!
அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிப்பதற்கான விரிவுபடுத்தப்பட்ட வெற்றிப் பயணத் திட்டத்தை சென்னை கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். முதலமைச்சர் விஜய்க்கு அரசு போக்குவரத்தில் சார்பில் நினைவு பரிசும் கொடுக்கப்பட்டது. சாதாரண நகர அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் விதமாக ’மகளிர் விடியல் பயணத் திட்டம்’ கடந்த திமுக ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் விரிவாக்கமாக எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் விதமாக வெற்றிப் பயணத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இத்திட்டத்தை சென்னை கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 84 லட்சம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, மாநகர, நகர்ப்புற, எக்ஸ்பிரஸ், டிலக்ஸ், புறநகர் மற்றும் மலைப்பகுதி சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் மகளிர், சிறுமியர் மற்றும் திருநர்கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான உச்ச வரம்போ, பயணங்களின் எண்ணிக்கையிலோ எந்த கட்டுப்பாடும் இன்றிப் பயனடையும் வகையில், அனைவருக்கும் கட்டாயமாக ‘ZERO Ticket’ வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் வெற்றிப் பயணத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் கட்டணமில்லா டிக்கெட் கொடுத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் உடனிருந்தார். மேலும் பேருந்தில் பயணித்த பெண் பயணிகள் முதலமைச்சர் விஜய்க்கு இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தனர்.
மேலும் மகளிர், திருநர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது, பேருந்துகளைப் பேருந்து நிறுத்தங்களில் சரியாக நிறுத்தி இயக்க வேண்டும் என்று நடத்துநர்கள், ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் வழித்தடப் பலகை உள்ள பேருந்துகளில் ’வெற்றிப் பயணம்’ என்று காட்சிப்படுத்தப்பட வேண்டும். டிஜிட்டல் பலகை இல்லாத பேருந்துகளில் அங்கீகரிக்கப்பட்ட ’வெற்றிப் பயணம்’ ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்குள் பயணிக்கும் வரை மட்டுமே ZERO Ticket செல்லுபடியாகும் என்றும் பயணியின் ஏறும் இடம் அல்லது இறங்கும் இடம் அண்டை மாநிலம் அல்லது யூனியன் பிரதேசமாக இருந்தால், அதற்குரிய வழக்கமான கட்டண டிக்கெட் பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புகார்களுக்கு 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிப் பயணத் திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் நிதி இழப்பினை அரசே ஈடு செய்ய உள்ளது. இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தேர்தல் நடைமுறைகள் நிறைவடையும் வரை இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்றும் தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




