--- --:--:-- --

டெங்கு தடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை..!

3

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆய்வு நடத்தினார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் வெள்ளம், கடல் நீர் உட்புகுதல் ஏற்படக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து, பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் திட்டங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.

 

மேலும், மீனவர்களுக்கு வானிலை மற்றும் கடல் எச்சரிக்கைகள் உரிய நேரத்தில் சென்றடைவதையும், புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பல்நோக்கு மையங்கள் பயன்பாட்டிற்கு தயாராக இருப்பதையும் உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டது. பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் தேவைக்கேற்ப நிவாரண முகாம்களாக பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்திட வேண்டுமென்றும், அங்கு குடிநீர், உணவு, மின்சாரம், கழிப்பறை மற்றும் மருத்துவ வசதிகள் தயாராக இருக்கவும், மீட்புக் குழுக்கள் மற்றும் தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

 

மேலும், டெங்கு தடுப்பு நடவடிக்கையாக வீடுகள் தோறும் ஆய்வுசெய்து ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அகற்றவும், கொசுப்புழு ஒழிப்பு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுப் பணிகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்திய முதலமைச்சர் விஜய், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்க தேவையான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிட்டார்.இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon