--- --:--:-- --

மதுராந்தகத்தில் சிபிஎம் தனித்து போட்டி..!

2

இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எம்.எல்.ஏ.க்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர்.

 

இதில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் இல்லாததால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.

 

திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இரு கட்சிகளும் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்கிற நிலைப்பாட்டில் இருப்பதாக இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், ஆலோசனைக்குப் பிறகு தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார். அதன்படி, தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது உறுதி என்றாலும் ஆக்கபூர்வமான அறிவிப்பை அக்கட்சியின் செயலாளர் சண்முகம் அறிவிப்பார் என்றும் வீரபாண்டியன் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon