அதிமுகவில் மோதல் தீவிரம்!அதிருப்தியாளர்களின் பதவியை பறித்த இபிஎஸ்.. நீக்க அதிகாரமில்லை என சண்முகம் போர்க்கொடி!
விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரு அணிகளாக பிரிந்து ஆதரவாகவும், எதிராகவும் வாக்களித்த நிலையில், அதிருப்தியாளர்களின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். எங்கள் மீது நடவடிக்கை எடுக்க இபிஎஸ்-க்கு அதிகாரம் இல்லை என்று சி.வி.சண்முகம்- வேலுமணி தரப்பு பதிலடி கொடுத்துள்ளது. அதிமுக அலுவலகத்தை சி.வி.சண்முகம் கைப்பற்றக்கூடும் என்ற தகவலால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசியல் களம் எப்போதும் அதிரடிகளுக்குப் பஞ்சம் இல்லாதது. ஆனால், சமீபகாலமாக அதிமுகவின் உள் விவகாரங்கள், அதிரடி த்ரில் படங்களை மிஞ்சும் அளவுக்குத் திருப்பங்களைக் கண்டு வருகிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, அதிமுகவை அதிகாரப்பூர்வமாக இரண்டு துண்டுகளாக்கிவிட்டது.
ஒருபுறம் ‘கட்சி என் கையில்’ என எடப்பாடி பழனிசாமி சாட்டையைச் சுழற்ற, ‘உங்களுக்கு அதிகாரம் கொடுத்ததே நாங்கள்தான்’ என சி.வி.சண்முகமும், வேலுமணியும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் மீண்டும் ஒரு தர்மயுத்தத்தைக் காணத் தயாராகிவிட்டது.
கொறடா உத்தரவா? கொள்கை முடிவா?
நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசுக்கு ஆதரவாக 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தது, எடப்பாடி தரப்பை நிலைகுலையச் செய்துள்ளது. எஞ்சிய 22 பேருடன் தனித்து விடப்பட்ட இபிஎஸ், ஆவேசத்தின் உச்சியில் இருக்கிறார். “கொறடா உத்தரவை மீறி, துரோகத்தின் நிழலில் தவெக அரசுக்கு ஆதரவளித்தவர்கள் மீது சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளோம். அதிமுகவின் விசுவாசத்தை விற்று, அமைச்சர் பதவிக்காகவும் வாரியத் தலைவர் பதவிக்காகவும் பேரம் பேசியுள்ளனர்” என்று இபிஎஸ் பொடியைப் போட்டார். மேலும், “திமுகவை எதிர்க்கவே கட்சி உருவானது; அவர்களுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. கட்சியை வழிநடத்தும் அதிகாரம் பொதுச்செயலாளரான என்னிடமே உள்ளது” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
ஆனால், சி.வி.சண்முகத்தின் பதிலடி அதிரடியாக இருந்தது. “சட்டமன்ற உறுப்பினர்கள் கூடித் தேர்ந்தெடுப்பதுதான் மரபு. இபிஎஸ் தானாக ஒரு கொறடாவை நியமித்துவிட்டு, அவர் பேச்சை நாங்கள் கேட்க வேண்டும் என்பது சட்டரீதியாக அபத்தம். 47 எம்.எல்.ஏ-க்கள் தன்னிடம் இருப்பதாகச் சொல்கிறாரே, எங்கே… எப்போது கூட்டம் நடந்தது? அந்தத் தீர்மான நகலை அவரால் காட்ட முடியுமா?” என்று சவால் விட்டார்.
அதுமட்டுமன்றி, “திமுக ஆதரவோடு நான் முதல்வர் ஆகப்போகிறேன் என புதுச்சேரியில் ஆசை வார்த்தை காட்டியது இபிஎஸ்-தான். திமுகவை ஒழிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், அதுதான் விஜய்யின் நோக்கமும். அதனால்தான் ஆதரித்தோம்” என குண்டைத் தூக்கிப் போட்டார்.
இபிஎஸ்-ஸின் அதிரடி ‘நீக்கம்’ படலம்!
தன்னைக் கேள்வி கேட்டவர்களையும், எதிரணிக்குச் சென்றவர்களையும் கட்சியை விட்டுத் தூக்கியெறிவதில் இபிஎஸ் எப்போதும் கில்லாடி. அந்த வரிசையில், தற்போது சி.வி.சண்முகம் மற்றும் வேலுமணி ஆதரவாளர்கள் என ஒரு பெரும் பட்டியலையே கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார்.
கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்த நத்தம் விசுவநாதன், தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி. வேலுமணி, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சி.வி. சண்முகம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் காமராஜ், புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளர் தங்கமணி, தர்மபுரி மாவட்டச் செயலாளர் அன்பழகன், திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் பென்ஜமின், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன், தேனி மேற்கு மாவட்டச் செயலாளர் ஜக்கையன் (முன்னாள் எம்.பி.) நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளர் இசக்கி சுப்பையா, கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சம்பத், திருப்பூர் மாவட்டச் செயலாளர் வீரமணி, கரூர் மாவட்டச் செயலாளர் விஜயபாஸ்கர், ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் இராமலிங்கம் (முன்னாள் எம்.பி.), கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி, கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் அருண்மொழிதேவன், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவி (முன்னாள் எம்.எல்.ஏ.), ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் சுகுமார், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மகேந்திரன் அதிமுகவில் இருந்து பழனிசாமி நீக்கி உள்ளார்.
நீலகிரி மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் குமார் (முன்னாள் எம்.பி.), தஞ்சாவூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ரெத்தினசாமி, மற்றும் தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலாளர் சேகர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
களமிறக்கப்பட்ட புதிய மாவட்ட செயலாளர்கள்!
நீக்கப்பட்ட இடங்களை நிரப்ப இபிஎஸ் தனது விசுவாசிகளை மின்னல் வேகத்தில் நியமித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்திற்கு பசுபதி (விழுப்புரம் தெற்கு நகரம்), கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுசாமி, புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்திற்கு பழனிவேல், நாமக்கல் மாவட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், திருவாரூர் மாவட்டத்திற்கு மூர்த்தி (எ) கிருஷ்ணமூர்த்தி, திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு ரவிச்சந்திரன், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்திற்கு லோகநாதன், ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்திற்கு சுமைதாங்கி ஏழுமலை, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பசுபதி, அதிமுக மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் வடக்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தாமோதரன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு ராமு, ஈரோடு மாநகர் மாவட்டத்திற்கு மனோகரன், நீலகிரி மாவட்டத்திற்கு பால. நந்தகுமார், திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு கார்த்திகேயன், கரூர் மாவட்டத்திற்கு கமலக்கண்ணன், தேனி மேற்கு மாவட்டத்திற்கு நாராயணசாமி, திருநெல்வேலி புறநகர் மாவட்டத்திற்கு ராமசுப்பிரமணியன், கடலூர் தெற்கு மாவட்டத்திற்கு சொரத்தூர் ராஜேந்திரன், தருமபுரி கிழக்கு மாவட்டத்திற்கு அசோகன், தருமபுரி மேற்கு மாவட்டத்திற்கு அன்பழகன், திருப்பூர் புறநகர் மாவட்டத்திற்கு திருப்பூர் சிவசாமி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு யோகநாதன், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு மனோகரன், தஞ்சாவூர் மத்திய மாவட்டத்திற்கு காந்தி, திண்டுக்கல் மேற்கு மாவட்டத்திற்கு பரமசிவம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைத்து, எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கர்மா ரிட்டர்ன்ஸ்- தொண்டனின் குமுறல்!
அதிமுக சீனியர்கள் ஒருவரையொருவர் மோதிக் கொள்வதை பார்த்து, அதிமுகவின் சாதாரணத் தொண்டன் கண்ணீருடன் பார்க்கிறான். “அம்மா இருந்தப்போ கம்பீரமா இருந்த கட்சி இன்னைக்குச் சிதறிக் கிடக்குதே” என்பதுதான் அவர்களின் வேதனை. “அன்று சசிகலா காலில் விழுந்து ஆட்சியைப் பிடித்துவிட்டு, அவர் சிறை சென்றதும் அவரை நீக்கினார் இபிஎஸ். பிறகு தினகரனைத் தூக்கினார். இரட்டை குழலாக இருந்த ஓபிஎஸ்-ஸை ஓரங்கட்டினார். இன்று யாருடைய தயவால் இதையெல்லாம் செய்தாரோ, அதே சி.வி.சண்முகமும் வேலுமணியும் அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள். அன்று சசிகலாவுக்குச் செய்த துரோகம், இன்று இபிஎஸ்-ஸுக்கே திரும்புகிறது. இதுதான் கர்மா!” எனத் தொண்டர்கள் குமுறுகின்றனர்.
சி.வி.சண்முகம் கடைசியாகச் சொன்ன ஒரு வாசகம் இபிஎஸ்-ஸைத் தூங்கவிடாது. “அதிமுக அலுவலகம் எங்களுக்குக் கோயில். எங்கள் உயிர் போன பிறகுதான் மற்றவர்கள் உள்ளே நுழைய முடியும். பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது” என அவர் அழைப்பு விடுத்திருப்பது, அதிமுகவில் மீண்டும் ஒரு ‘சின்னம்மா – ஓபிஎஸ் – இபிஎஸ் – சிவிஎஸ்’ இணைப்புப் படலத்திற்கு அடித்தளம் இடுகிறதா? அல்லது கட்சி மீண்டும் பல துண்டுகளாகச் சிதறுமா? ரத்தத்தின் ரத்தங்களுக்கும் இடையே மவுனப் போர் ஒன்று தொடங்கிவிட்டது. விரைவில் கூடும் அதிமுக பொதுக்குழு, இதற்கெல்லாம் தீர்வாக அமையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!





