--- --:--:-- --

இந்தியாவிற்கு பச்சை கொடி காட்டிய ஈரான்..!

3

ரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதனால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவற்றை ஏற்றிக் கொண்டு வரும் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டன. இந்நிலையில், இந்தியக் கொடியுடன் கூடிய எல்.பி.ஜி கப்பல் ஒன்று வெள்ளிக்கிழமை இரவு நீரிணையை கடந்துள்ளதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.

 

 

இந்திய கப்பல் கழகத்திற்கு சொந்தமான ஷிவாலிக் கேஸ் கப்பல் வெள்ளிக்கிழமை இரவு ஹோர்முஸ் நீரிணையை கடந்து சனிக்கிழமை அதிகாலை 12:45 மணியளவில் ஓமன் வளைகுடாவில் இருந்ததாக ‘மரைன் டிராஃபிக்’ தரவுகள் உறுதிப்படுத்தின. இதேபோல் மற்றொரு எல்பிஜி கப்பலான நந்தா தேவியும் சில மணி நேரங்களில் இந்த நீரிணையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் பேசிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது “சரக்குகள் மற்றும் எரிசக்தி தடையின்றி செல்வதே இந்தியாவின் முக்கிய முன்னுரிமை” என்று மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் ஈரான் அமைச்சருடன் இது குறித்துப் பேசியுள்ளார்.

 

இந்தியாவிற்கு வரும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முன்னதாக, ஈரான் தனது சொந்த கச்சா எண்ணெய் கப்பல்களையும் சீனக் கப்பல்களையும் மட்டுமே ஹோர்முஸ் நீரிணையை கடக்க அனுமதித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

 

ஆனால், சமீபத்தில் சவுதி அரேபியா மற்றும் ஈராக்கிலிருந்து சுமார் 30 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெயைச் சுமந்து வந்த இரண்டு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியக் கடல் எல்லைக்கு வந்து சேர்ந்துள்ளன. இந்தியாவின் எல்.பி.ஜி நுகர்வு ஆண்டுக்கு 33 மில்லியன் டன்களாக உள்ள நிலையில், அதில் 60% இறக்குமதியைச் சார்ந்துள்ளது. இதில் 90% மேற்கு ஆசியாவிலிருந்து வருவதால், இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எரிவாயு தேவையில் 54% இந்த ஒரே ஒரு கடல் பாதையைத்தான் நம்பியுள்ளது.

 

இந்த வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள முடக்கத்தால், இந்தியாவின் எல்.பி.ஜி இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 33 கோடி இந்தியக் குடும்பங்களின் சமையல் எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, வணிக மற்றும் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு விநியோகத்தை மத்திய அரசு குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon