சென்னை – மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணி..!
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதிலும், துறைமுக சரக்கு போக்குவரத்தை எளிதாக்குவதிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கப்போகும் சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட மேம்பாலத் திட்டப் பணிகள் அனைத்தும் 2027 நவம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தெரிவித்துள்ளது.
செம்பரம்பாக்கம் அருகே உள்ள 64 ஏக்கர் பரப்பளவிலான யார்டில், மேம்பாலத்திற்கான பிரம்மாண்ட கான்கிரீட் தூண்கள் மற்றும் ‘பாக்ஸ் கார்டர்’ (Box Girders) தயாரிக்கும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சென்னை மண்டல அதிகாரி வீரேந்தர் சம்பியால் தி இந்து நாளிதழிடம் கூறுகையில், ”தமிழக அரசு இந்தத் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
தற்போது நாள் ஒன்றுக்கு 11 மணி நேரம் நடைபெறும் பணிகளை, 16 மணி நேரமாக உயர்த்த அரசு உறுதியளித்துள்ளது. இதன் மூலம் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அடித்தளப் பணிகளை (Pile Caps) முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 15 நாட்களில் முதல் அடுக்குக்கான கார்டர்களைப் பொருத்தும்பணி தொடங்கும்” என்றும் கூறினார்.
மொத்தம் 21 கி.மீ. நீளம் கொண்ட இந்த மேம்பாலத்தின் 15 கி.மீ. பகுதி கூவம் ஆற்றின் வழியே செல்கிறது. இந்தத் திட்டத்தின் தனிச்சிறப்பு அதன் ஈரடுக்கு அமைப்பாகும். முதல் அடுக்கு (கீழ் தளம்): இது நகரின் உள்ளூர் போக்குவரத்துக்காக (Local Traffic) ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 13 ஏறும் மற்றும் இறங்கும் பாதைகள் (Ramps) அமைக்கப்பட்டு, கோயம்பேட்டில் முடிவடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் அடுக்கு (மேல் தளம்): இது கனரக வாகனங்கள் மற்றும் துறைமுகத்திற்குச் செல்லும் வாகனங்களுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது. இதன் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் மதுரவாயலில் அமையும்.
இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தவுடன், தினசரி சுமார் 20,000 உள்ளூர் வாகனங்களும், 5,500 கனரக வாகனங்களும் இந்தச் சாலையைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நகரின் உட்புறச் சாலைகளில் நிலவும் நெரிசலை பெருமளவு குறைக்கும்.
வரும் காலங்களில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2047-ம் ஆண்டிற்குள் இந்த உயர்மட்டச் சாலையில் பயணிக்கும் உள்ளூர் வாகனங்களின் எண்ணிக்கை தினசரி 52,080 ஆக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பருவமழை மற்றும் ஆற்றில் தற்காலிக அணைகளை அகற்றுவது போன்ற சவால்களால் பணிகள் தாமதமானாலும், தற்போது கூடுதல் நேரப் பணி மூலம் அந்தத் தாமதம் ஈடுகட்டப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.





