இன்று தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி..!
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் சூழலில் அரசியல் களம் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், திருச்சி பஞ்சப்பூரில் இன்று மாலை நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
கேரள மாநில பெயர் மாற்றத்திற்கு பின் முதல் முறையாக அங்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து விட்டு விமானம் மூலம் மாலை திருச்சி வருகிறார். சாலை மார்க்கமாக பஞ்சப்பூர் செல்லும் பிரதமர் மோடி, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 3,680 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கும் நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதன்பின் பிரதான் மந்திரி கிராம சாலை யோஜனா திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 370 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள 89 கிராமப்புற சாலைகளை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, கங்கைகொண்ட சோழபுரம் அருகே அமையவுள்ள பசுமை வழிப் புறவழிச்சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
அதைத் தொடர்ந்து இரண்டு அம்ரீத் பாரத் விரைவு ரயில் உள்பட 6 ரயில்களை கொடியசைத்து பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். அதன் பின் மாநாட்டு திடலுக்கு செல்லும் பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றுகிறார்.
இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
பொதுக்கூட்டத்திற்காக 30 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், திருச்சி பஞ்சப்பூர் பகுதி காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கு 7 லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்ந்திரன் தெரிவித்துள்ளார். வரும் வாரத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மாநாட்டுக்கு பின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





