. தவெக விஜய் களம் இறங்கும் 2 தொகுதிகள்..!
நடிகர் விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி, அரசியலுக்குள் வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த ஆண்டே நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது, அதில் தவெக போட்டியிடாது என்றும், தவெகவின் இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தலே என்றும் அறிவித்தார்.
அதுபோலவே, 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாக கொண்டு தவெக தலைவர் விஜய் தனது செயல்பாடுகளை தொடங்கினார். கட்சியின் மாநாடு நடத்துவது, மாவட்டங்கள் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திப்பது என இருந்தார்.
இதில், கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், கைக்குழந்தை என மொத்தம் 41 பேர் பரிதாபமாக பலியாகினர். தற்போது இது தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணையில் இருந்துவருகிறது.
இதனையடுத்து, மக்கள் சந்திப்பை நிறுத்திய விஜய், நிர்வாகிகள் சந்திப்பு என மாற்றி சுமார் 5,000 பேர் வரை சந்தித்து வருகிறார். இதற்கிடையில், ஜனநாயகன் பட சிக்கல், புலி படத்தில் வரி ஏய்ப்பு எனும் நீதிமன்றத்தின் தீர்ப்பு, சமீபத்தில் அவரது மனைவி தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கும், அதில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டும் என அடுத்தடுத்த நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறார்.
இருந்தாலும், தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டுவரும் விஜய், சமீபத்தில் தவெக சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் தனது மனைவி தொடர்ந்த வழக்கைப் பற்றி பேசியபோது “வர்த் இல்லை” எனப் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், இன்னும் சில தினங்களில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், கூட்டணி, தொகுதி பங்கீடு என அரசியல் கட்சிகள் வேகமாக இயங்கிவரும் சூழலில், மறுப்பக்கம் யார் எந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு என்பது குறித்தான தகவல்களும் வெளியாகிவருகிறது.
அந்த வகையில் தவெக தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் களம் இறங்க திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும், திமுக கைவசம் இருக்கும் இரண்டு தொகுதிகளில் அவர் போட்டியிட இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் கவனம் பெற்றுள்ளது.
அதன்படி விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுகவின் இனிகோ இருதயராஜும், பெரம்பூர் தொகுதியில் ஆர்.டி. சேகரும் எம்.எல்.ஏ.வாக இருந்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





