தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை..!
தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகத்திலிருந்து கடலோர கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 11, 12 ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரும் 13ம் தேதி ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 12, 13 ஆகிய தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.






