--- --:--:-- --

தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது +2 பொதுத்தேர்வு..!

1

மிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2025-26 பொதுத் தேர்வுகள் 12 ம் வகுப்பிற்கு மார்ச் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்.6 வரை நடைபெற உள்ளது. இன்று தொடங்கும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை, 3,412 தேர்வு மையங்களில், பள்ளி மாணவர்கள் 7,99,692 பேரும், தனித்தேர்வர்கள் 27,783 என மொத்தம் 8,27,475 தேர்வர்கள் எழுதவுள்ளனர்.

 

மாநில கல்விக் கொள்கை பரிந்துரையின் அடிப்படையில் 11ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டுகளில் 11 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல் உள்ள மாணவர்களுக்கு தேர்வு மார்ச் 3 ந் தேதி முதல் 27 ந் தேதி வரையில், 2,615 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இதனைப் பள்ளி மாணவர்கள் 19,107 பேர் மற்றும் தனித்தேர்வர்கள் 5,944 என மொத்தம் 25,051 தேர்வர்கள் எழுதவுள்ளனர். மேல்நிலைப் பொதுத்தேர்வினை 281 சிறைவாசிகள் தேர்வெழுதவுள்ளனர்.

பொதுத் தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 49,000- க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாகவும், தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4900க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 

சென்னை மாவட்டத்த்தை பொறுத்தவரை 578 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 30,663 மாணவர்கள், 33,696 மாணவிகள் என மொத்தம் 64,359 மாணவர்களும் மற்றும் 3,157 தனித் தேர்வர்கள் 250 தேர்வு மையங்களிலும் தேர்வெழுத உள்ளனர். தேர்வுகளுக்காக 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 5 விடைத்தாள் சேகரிக்கும் மையங்களும், வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல 65 வழித்தடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

 

250 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 250 துறை அலுவலர்கள், 550 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள், 4100 அறை கண்காணிப்பாளர்கள், சொல்வதை எழுதுபவர்கள் மற்றும் 1000 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 6,150 பேர் தேர்வு பணிகளில் சென்னை கல்வி மாவட்டத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

Right Menu Icon