3 மாதங்களுக்கு வெப்ப அலை வீசும் – வானிலை மையம்
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வட தமிழ்நாட்டில் மூன்று மாதங்களுக்கு வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பனிக்காலம் நீண்டிருந்த நிலையில், கோடைகாலத்தில் வெயில் வாட்டி வதைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் முதல் மே மாதம் வரை 3 மாதங்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
வரும் புதன் கிழமை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் கூறியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், சென்னை உட்பட தமிழக கடலோர பகுதிகளிலும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.





