சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்..!
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று கணித பாடமும், வரும் 21 ஆம் தேதி ஆங்கிலமும், 25 ஆம் தேதி அறிவியலும், மார்ச் 2 ஆம் தேதி இந்தியும், மார்ச் 7 ஆம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வும் நடைபெறுகிறது.
12 ஆம் வகுப்பு மாணவர்கள் உயிரிதொழில்நுட்பவியல் பாடத் தேர்வை எழுதுகின்றனர். இன்று தொடங்கும் தேர்வு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வுகள் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறுகின்றன.
தேசிய கல்விக் கொள்கையின் படி, இந்த ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. முதல் வாரியத் தேர்வை எழுதாமல், நேரடியாக இரண்டாவது வாரியத் தேர்வை எழுதலாமா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், அனைத்து மாணவர்களும் முதல் வாரியத் தேர்வை எழுதுவது கட்டாயம் என சிபிஎஸ்இ தெளிவுப்படுத்தியுள்ளது.
முதல் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்த 3 முக்கிய பாடங்களில் அதாவது, அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பாடங்களில் மீண்டும் தேர்வு எழுதலாம் என விளக்கமளித்துள்ளது. முதல் தேர்வில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை எழுதத் தவறிய மாணவர்கள் இரண்டாம் வாரியத் தேர்வு எழுதத் தகுதி பெற மாட்டார்கள் என்றும் கூறியுள்ளது.





