ரேஷன் கார்டுதார்களுக்கு செல்போன் வழங்கப்படும்..!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கானாடுகாத்தானில் செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, கழனி வாசல் பகுதியில் 100 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அரசு சட்டக் கல்லூரியையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும் இரண்டாயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற 49 பணிகளை முதலமைச்சர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை மாவட்டத்திற்கு அரசு கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டார்.
திமுக அரசின் திட்டங்களை பார்த்து அதனை தேர்தல் அறிக்கையாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையாக காப்பி அடித்து இருப்பதாக முதலமைச்சர் விமர்சித்தார். அவர் நிச்சயம் முதல்வராக போவதில்லை. ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளையே நிறைவேற்றவில்லை. பழனிச்சாமி சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடற்கரை சாலையை நிறைவேற்றினார்களா? அவர்கள் தற்போது அடுத்த செட் வாக்குறுதியை வழங்கியுள்ளார்கள்.
ரேஷன் கார்டுதார்களுக்கு செல்போன் வழங்கப்படும் என்று சொன்னீர்களே, எங்கே அந்த போன்? இலவச வைபை என்று சொன்னீர்களே, அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் அம்மா இரு சக்கர வாகன பழுது பார்க்கும மையம் எங்கே? பழனிச்சாமி சொன்னதை செய்யமாட்டார் என்று மக்களுக்கு தெரியும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தலுக்காக பிரதமர் மோடி பொய்யான குற்றச்சாட்டுகளை தங்கள் ஆட்சி மீது சுமத்தி வருவதாக கூறினார். தமிழ்நாட்டின் திட்டங்கள் மற்றும் அதனால் அடைந்த பயன்களை மத்திய அரசே பாராட்டி இருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள திருத்தத்தால், 125 நாட்களில் பாதி நாட்கள் வேலை கிடைப்பதே சந்தேகம் தான் என்று முதலமைச்சர் கூறினார். இதனை தொடர்ந்து, மினி டைடல் பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்தார்.






