--- --:--:-- --

அன்புமணிக்கு எதிரான வழக்கு.. பிப்ரவரி 2-ல் விசாரணை..!

2

பாமகவின் மாம்பழ சின்னத்தை அன்புமணி தரப்புக்கு ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய கோரிய வழக்கில் விசாரணை தேதி வெளியாகியிருக்கிறது.
பாமகவில் நிறுவனர் இராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அன்புமணியின் தலைவர் பதவி காலம் முடிந்துவிட்டதால், இனி பாமகவுக்கு நான் தான் தலைவர் என இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

ஆனால், தேர்தல் ஆணையம் தன்னை பாமகவின் தலைவராக அங்கீகரித்துவிட்டது என்று அன்புமணி தெரிவித்து வருகிறார். இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் தேர்தல் ஆணையத்தில் தவறான ஆவணங்கள் கொடுத்ததை ஏற்று அதன் அடிப்படையில் அன்புமணி இராமதாஸை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்றும் பாமக நிறுவனர் இராமதாஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட அசல் ஆவணங்களை முறையாக ஆராயாமல் தேர்தல் ஆணையம் தவறான முடிவெடுத்துள்ளது எனவும் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

 

இந்த வழக்கின் விசாரணையின் போது, “தேர்தலின்போது இருதரப்பு பிரச்னை இருந்தால் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படும் என்றும் கட்சியினரிடையே நிலவும் இந்தப் பிரச்சனையில் சுயாதீன அமைப்பான தேர்தல் ஆணையத்தைக் குறை கூறக்கூடாது” என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது.

இதற்கிடையே தான் அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக்கோரி ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் பிப். 2-ல் விசாரணை வருகிறது. கட்சி தலைவர் என்ற முறையில் தனது முகவரிக்கு கடிதம் அனுப்ப தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2025-ம் ஆண்டு மே மாதமே பதவிக்காலம் முடிந்த நிலையில், கட்சியின் தலைவராக நீடிப்பதாக அன்புமணி போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக ராமதாஸ் மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ள நிலையில், சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தேர்தல் ஆணையம் தனக்கு தான் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon