யுஜிசியின் நடவடிக்கை தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
உயர்கல்வி நிறுவனங்களில் மாணவரிடையே சாதி மற்றும் பாலின பாகுபாட்டை களைய பல்கலைக்கழக மானியக் குழு கொண்டு வந்துள்ள விதிகளுக்கு முதலமைச்சர் வரவேற்பு தெரிவித்துள்ளார். மாணவர்களிடையே சாதி, பாலினம் சார்ந்த பாகுபாட்டைக் களைய சமத்துவக் குழுக்கள் அமைக்க யூஜிசி புதிய விதிமுறைகளை வெளியிட்டது.
இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், பாகுபாடுகள் வேரூன்றி உள்ள உயர்கல்வி முறையை சீர்திருத்தும் யுஜிசியின் நடவடிக்கை தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் தற்கொலைகளும், தென்னிந்தியர்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்த சூழலில் சமத்துவத்தை பாதுகாக்கும் நடவடிக்கை தேவையான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மண்டல் கமிஷன் படி இடஒதுக்கீடு அமலுக்கு வந்த போது எதிர்ப்பு தெரிவித்த அதே பிற்போக்கு மனநிலையுடன்தான் யூஜிசியின் நடவடிக்கைக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் எனவும், இந்த அழுத்தங்களுக்கு ஆட்பட்டு புதிய விதிகளையோ அவற்றின் மைய நோக்கங்களையோ மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்யக்கூடாது என்றும் பதிவிட்டுள்ளார்.
உயர்கல்வி நிறுவனத் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் தலைமையிலேயே சமத்துவக் குழுக்களை அமைத்தால் அவை எப்படி சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்ற கேள்வி எழுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.






