--- --:--:-- --

வெளியேறிய ஆளுநர்.. அமைச்சர் ரகுபதி அளித்த’பேட்டி..!

7

மிழக சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்து அரசின் விளக்கத்தை அளித்தார். தமிழக சட்டமன்ற மரபுப்படி நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்.

 

ஆனால், ஆளுநர் தொடக்கத்திலேயே தேசிய கீதம் பாடவில்லை எனக் கூறி உரையை வாசிக்காமல் வெளியேறியது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் தெரிவித்தார். ஆளுநரின் மைக் அணைக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாரை அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாக மறுத்தார். இது “சுத்தமான புழுகு” என்றும், சபையை நடத்தும் அதிகாரம் சபாநாயகருக்கே உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.9% என ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், வளர்ச்சி இல்லை என ஆளுநர் கூறுவது அவரது அறியாமையையே காட்டுகிறது. 12 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதை அவர் மறைக்கப் பார்க்கிறார் என்று சாடினார்.

 

போதைப்பொருள் உற்பத்தி தமிழகத்தில் இல்லை, அவை அண்டை மாநிலங்களில் இருந்தே வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த முதல்வர் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். புகார்கள் அதிகரிப்பது மக்கள் தைரியமாகப் புகார் அளிக்க முன்வருவதையே காட்டுகிறது. இந்தியாவின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 18 தமிழகத்தில் இருப்பதே மாநிலத்தின் கல்வித் தரத்திற்குச் சான்று. ஆளுநரின் விமர்சனம் உள்நோக்கம் கொண்டது.

 

ஆளுநர் வெளியேறிய 10 நிமிடங்களிலேயே ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை வெளியானது, இது முன்பே திட்டமிடப்பட்ட ஒரு நாடகம் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார். தமிழக அரசைத் தரம் தாழ்த்திப் பேசுவதற்காகவே ஆளுநர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்றும், 2026 தேர்தலை மனதில்கொண்டு அவர் செயல்படுகிறார் என்றும் அமைச்சர் ரகுபதி தனது பேட்டியில் குற்றம் சாட்டினார்.

Right Menu Icon