சட்டப்பேரவையில் ஆளுநர் வெளிநடப்பு – தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்
2026-ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கவிருந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேட்டி அளித்த தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். மற்ற மாநிலங்களில் ஆளுநர் வந்தவுடன் சபாநாயகர் எழுந்து நிற்பதும், தேசிய கீதம் இசைக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் தேசிய கீதம் இசைப்பதற்கே ஒரு ஆளுநர் போராட வேண்டியுள்ளது வருத்தமளிக்கிறது என அவர் குறிப்பிட்டார்.
ஆளுநர் பேச முற்படும்போது மைக்கை அணைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பிய அவர், உச்சபட்ச அரசியலமைப்பு பதவியில் இருப்பவரை இழிவுபடுத்துவது வருந்தத்தக்கது என்றார். 100 ஆண்டுகால மரபு என்று கூறும் சபாநாயகர், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடரைத் தொடங்குவது மட்டும் மரபு இல்லையா என்று தமிழிசை கேள்வி எழுப்பினார்.
தான் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எதிரானவள் அல்ல என்றும், வட இந்திய நிறுவனங்களிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவள் நான் என்றும் கூறினார். இருப்பினும், தேசிய கீதத்தையும் இசைக்க வேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் அரசுக்கு என்ன பிரச்சனை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.





