--- --:--:-- --

கொரோனா வைரஸ் போல் தாக்கி கொண்டே இருக்கும் மத்திய அரசு

2

கொரோனா வைரஸ் போல தாக்கிக் கொண்டே இருக்கும் மத்திய பாஜக அரசையும் மீறி தமிழ்நாடு இன்று பல்வேறு இலக்குகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளை முன்னிட்டு பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு என்று தலைப்பிட்டு திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.

 

அதில், கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் இயற்கையும் அரசு நிர்வாகமும் பருவம் தவறாமல் பணி செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவாக, விளைநிலங்கள் செழித்து, உழவர்களுடைய உழைப்பின் விளைச்சலையும், அதற்குரிய பலன்களையும் அதிகமாக்கியிருப்பதால் அவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குவதாகவும் கூறியுள்ளார்.

 

ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா இரண்டாவது பேரலையின் கடுமையான தாக்கம், அதனைத் தொடர்ந்து நிரந்தரக் கொரோனா போல தாக்கிக் கொண்டே இருக்கும் மத்திய பாஜக அரசின் தமிழ்நாட்டின் மீதான வஞ்சகம், அவ்வப்போது எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்கள் என எல்லாவற்றையும் கடந்து, தமிழ்நாடு இன்று பல்வேறு இலக்குகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

நிரந்தரத் தடைகளை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகளைக் கடந்து, நிரந்தர மகிழ்ச்சியை மக்களுக்குத் தருவதுதான் திராவிட மாடல் அரசின் உன்னத நோக்கமாகும் என்று கூறியுள்ள முதலமைச்சர், சூரியனைப் போற்றும் பொங்கல் நன்னாள், தொண்டர்களின் உழைப்பினால் திமுகவிற்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Right Menu Icon