பொங்கலுக்கு மேலும் 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, மேலும் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்க உள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், சிறப்பு ரயில்களை அறிவித்திருந்தது. இந்த நிலையில் மேலும் 10 கூடுதல் சிறப்பு ரயில்கள் பொங்கலையொட்டி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, நெல்லையில் இருந்து ஜனவரி 13, 20 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் புறப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் அதேநாட்களில் தாம்பரத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2 மணிக்கு நெல்லை வந்தடைய உள்ளது. நெல்லை – செங்கல்பட்டு இடையேயான அதிவிரைவு சிறப்பு ரயில் வரும் 14ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 1.15 மணிக்கு செங்கல்பட்டை வந்தடைய உள்ளது. மறுமார்க்கத்தில் அதேநாளில் செங்கல்பட்டில் இருந்து நெல்லைக்கு மதியம் 3.30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து ஜனவரி 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் நள்ளிரவு 12.30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு அதே நாளில் மதியம் 1.30 மணிக்கு தாம்பரம் வந்தடைய உள்ளது. மறுமார்க்கத்தில் அதே நாட்களில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8 மணிக்கு நெல்லை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 12, 19 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் நண்பகல் 12.15 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைய உள்ளது. மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து ஜனவரி 13, 20 ஆகிய தேதிகளில் மாலை 5.50 மணிக்கு சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட உள்ளது.
இதேபோன்று கோவை போத்தனூரில் இருந்து இன்றிரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைய உள்ளது. மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 9.05 மணிக்கு போத்தனூர் வந்தடைய உள்ளது.
இதில், போத்தனூர் – சென் ட்ரல் – போத்தனூர் இடையிலான சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், மற்ற ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.






