--- --:--:-- --

11 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!

1

ங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இன்று செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கையும், சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று மதியம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

இது அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில், வடதமிழகம், புதுவை, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதா என்பது இன்று தான் தெரியும் என்று வானிலை மைய தென்மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

 

காற்றழுத்தம் காரணமாக, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும், சேலம், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Right Menu Icon