பழைய எதிரிகள், புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட்டு பார்க்க முடியாது – முதல்வர்
கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல தி.மு.கழகம். நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து இலட்சிய வீரர்களாகப் புறப்படுவோம் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா, வரும் செப்டம்பர் 17 அன்று கரூர் மாநகரில் நடைபெற உள்ளது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாட்கள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் நினைவுகூரும் விதமாக நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு, திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
கலைஞரால் தொடங்கப்பட்ட இந்த முப்பெரும் விழா, திராவிட இயக்கத்தின் கொள்கை இலட்சியங்களை நிலைநிறுத்தும் ஒரு திருவிழா என்று மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இளைஞரணி செயலாளராகத் தானே பேரணிகளை வழிநடத்தியதை நினைவு கூர்ந்த அவர், இது கடந்த கால சாதனைகளைத் திரும்பிப் பார்த்து, எதிர்காலப் பயணத்தைத் தொய்வின்றித் தொடர்வதற்கான பாசறை என்று தெரிவித்தார்.
மேலும், “பழைய எதிரிகள், புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொடக்கூட முடியாது” என்று அவர் சூளுரைத்தார்.இந்த ஆண்டு முப்பெரும் விழா கரூர் புறவழிச்சாலையில் உள்ள கோடாங்கிப்பட்டி என்ற இடத்தில் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளைக் கரூர் மாவட்டச் செயலாளர் செந்தில்பாலாஜி மேற்கொண்டு வருவதாக மு.க.ஸ்டாலின் பாராட்டினார். மாலை 5 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவுக்கு, துரைமுருகன் தலைமை தாங்குவார். முப்பெரும் விழாவுடன், செப்டம்பர் 15 அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி, “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள், “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னணி மாநிலமாகத் திகழ்வதாகவும், பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி, மருத்துவக் கட்டமைப்பு, தொழில் முதலீடுகள் போன்றவற்றில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுவதாகவும் அவர் கூறினார். ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்குச் சான்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த முப்பெரும் விழா, 2026ஆம் ஆண்டுத் தேர்தலில் திமுக வெற்றிபெறுவதற்கான முன்னோட்ட அணிவகுப்பாக அமையும் என்றும், தொண்டர்கள் கட்டுப்பாட்டுடன் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.






