திறன் திட்ட மாணவர்களுக்குத் தனி வினாத்தாள்..!
அரசுப் பள்ளிகளில் ‘திறன் திட்டம்’ என்ற சிறப்புப் பயிற்சித் திட்டத்தில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கு தனி வினாத்தாள்களைத் தயாரித்து வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, மாநிலம் முழுவதும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள இந்த சுற்றறிக்கையில், 6 முதல் 9ஆம் வகுப்பு வரை மாநில பாடத்திட்டத்தில் நடைமுறையில் உள்ள திறன் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்காக வரவுள்ள காலாண்டுத் தேர்வுகளில், திறன் பாடப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்ட வினாத்தாள்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள், மாணவர்களின் அடிப்படை கற்றல் விளைவுகளை சோதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வினாத்தாள்களின் மொத்த மதிப்பெண்கள், வழக்கமான காலாண்டுத் தேர்வு வினாத்தாள்களின் மதிப்பெண்களுக்குச் சமமாக இருக்கும்.
கூடுதலாக, பயிற்சி நோக்கத்திற்காக அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்களும் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கின்றன. காலாண்டுத் தேர்வுக்கான அனைத்து வினாத்தாள்களையும், https://exam.tnschools.gov.in/#/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கான கால அட்டவணையும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த சிறப்புத் திட்டத்தில் உள்ள மாணவர்களுக்குத் தேவையான வினாத்தாள்களை சரியான நேரத்தில் வழங்கி, காலாண்டுத் தேர்வுகள் எவ்விதத் தடையுமின்றி நடைபெறுவதை உறுதிசெய்யுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது, மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் தேவைகளுக்கு ஏற்ப கல்வியை வழங்குவதற்கான ஒரு முக்கிய படியாகும்.






