--- --:--:-- --

கவர்னர் சூப்பர் முதல்வராக செயல்பட முடியாது: சுப்ரீம் கோர்ட்

6

சோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், கவர்னர் ஒரு “சூப்பர் முதல்வராக” செயல்பட முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் செய்துள்ளது. தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தது.

 

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி தீர்ப்பளித்தது. அதில், கவர்னர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர முடியும் எனத் தெரிவித்திருந்தது.

 

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறும் வகையில், குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பி உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பியிருந்தார். இந்தக் கேள்விகள் தொடர்பான மனு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம்நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துருக்கர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று ஆறாவது நாளாக விசாரணை நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார்.

 

அவர் தனது வாதத்தில், “ஒரு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பும்போது, அதை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப சட்டப்பேரவைக்கு அதிகாரம் உண்டு. அதேபோல, மாறும் சூழல் மற்றும் கொள்கைகள் காரணமாக மசோதாவை மீண்டும் நிறைவேற்றாமல் கைவிடும் அதிகாரமும் சட்டப்பேரவைக்கு உள்ளது” என்று கூறினார்.

 

“ஆட்சி மாற்றம் அல்லது கொள்கை மாற்றம் போன்ற காரணங்களுக்காக ஒரு மசோதாவை கவர்னர் நிறுத்திவைக்கவோ அல்லது நிராகரிக்கவோ அதிகாரம் இல்லை. கவர்னர் தனிப்பட்ட முறையில் எந்த மசோதா மீதும் முடிவெடுக்க முடியாது. அவர் ஒரு சூப்பர் முதல்வராக செயல்பட முடியாது” என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

ஒரு மசோதாவை கவர்னர் நிறுத்தி வைத்தால் அது செயலிழந்து விட்டதாகவோ, உயிரற்றதாகவோ கருத முடியாது. அதற்கான அதிகாரத்தை அரசியல் சாசனம் கவர்னருக்கு வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதே சமயம், சட்டப்பேரவை கூடாத நேரத்தில் அமைச்சரவையின் ஆலோசனைப்படி அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க மட்டுமே கவர்னருக்கு அதிகாரம் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Right Menu Icon