--- --:--:-- --

தவெக மாநாடு வெற்றியா? அதிமுக ஓட்டுகளை கபளீகரம் செய்ய திட்டம்.. கூடும் கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறுமா? 

ஒருவழியாக மதுரையில் தவெக  மாநாட்டை வெற்றிகரமாக விஜய் நடத்தி முடித்துள்ளார். திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என்று சூளுரைத்த விஜய், அதிமுக வாக்கு வங்கியை கவரும் நோக்கில்,  அதன் தொண்டர்களுக்கு வலைவீசும் வகையில் பொடி வைத்து பேசினார்.

ஆனால், கூடும் கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறுமா என்பது, அடுத்த 6 மாதங்களில் விஜய் கடுமையாக உழைப்பதில்தான் இருக்கிறது.
மதுரை பாராபத்தியில், தமிழக வெற்றிக்கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு, மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. சட்டசபைத் தேர்தல் நெருங்கிய நிலையில் மாநாட்டில் விஜயின் பேச்சை அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
விக்கிரவாண்டி மாநாட்டில் இல்லாதபடி, இந்த மாநாட்டில் விஜய் சுமார் 35 நிமிடங்கள் பேசினார். மாநாட்டின் ஆரம்பத்திலேயே எம்.ஜி.ஆர். – விஜயகாந்தை புகழ்ந்து தள்ளினார் விஜய். இதன் மூலம் அதிமுக- தேமுதிக தொண்டர்களின் வாக்குகளை கவர வேண்டும் என்பதுதான் விஜயின் உத்தி.
பின்னர் மத்தியில் மாநிலத்தில் ஆளும்  கட்சிகளான திமுக- பாஜவை வெளுத்து வாங்கினார் விஜய். தமிழகத்துக்கு எதுவும் செய்யாமல் மத்திய பாஜக அரசு ஓரவஞ்சனை செய்கிறது. கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள், நீட் விலக்கு பெற்று தாருங்கள் நரேந்திர தாமோதர தாஸ் மோடி அவர்களே என ஆவேசமாக விஜய் முழங்கினார்.
அதேபோல் ஸ்டாலினையும் விஜய் விட்டுவைக்கவில்லை. ஸ்டாலின் அங்கிள், மனசாட்சி இருந்தால் பதில் சொல்லுங்கள். உங்கள் ஆட்சியில் நியாயம் இருக்கா? ஊழல் இல்லாத ஆட்சியா இது? பெண்கள், குழந்தைகள், இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கா? டாஸ்மாக்கில் மட்டுமே ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறுகின்றனர். இந்த பெண்களின் குரல் உங்களுக்கு கேட்கிறதா என்று விஜய் கேள்வி எழுப்பினார்.
வரும் தேர்தலில் திமுக- தவெக இடையே தான் போட்டி என்று, மேடையில் ஆணித்தரமாக விஜய் கூற, அங்கிருந்த மொத்த கூட்டமும் ஆரவாரம் செய்தது. இதன் மூலம் தேர்தல் களத்தில் அதிமுக-பாஜக எல்லாம் தனக்கு ஒரு பொருட்டே அல்ல என்று மறைமுகமாக விஜய் உணர்த்தி இருக்கிறார். தமிழகத்தில் 1967, 1977-ஆம் ஆண்டுகளில் அரசியல் மாற்றம் நிகழ்ந்ததுபோல, வரும் 2026-ம் ஆண்டிலும் அப்படி ஒரு வரலாறு திரும்பும் என்று நம்பிக்கையோடு விஜய் பேசினார்.
இதுதவிர கமல், ரஜினி, சரத்குமார் போன்றவர்களையும் விஜய் மறைமுகமாக தாக்கினார். நான் மார்க்கெட் போன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலத்துடன் வந்துள்ளேன். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் போன பிறகுதான் கட்சியை தொடங்கினேன். தமிழகத்தின் 234 தொகுதியிலும் இந்த விஜய்தான் வேட்பாளர் என்ற் விஜய் சொல்ல, தவெகவினர் ஆரவாரம் செய்தனர்.
அதிமுக வாக்குகளை கவர, எம்ஜியாரை புகழ்ந்த விஜய், அதன் இப்போதைய தலைமையை மறைமுகமாக விமர்சித்தார். பாசிச பாஜவுடன் கூட்டணிக்கு சேர நாம் என்ன ஊழல் கட்சியா என்று அதிமுகவை மறைமுகமாக குறிப்பிட்ட விஜய், அந்த கூட்டணி பொருந்தாக்கூட்டணி என்றார். எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக, இப்போது எப்படி இருக்கிறது? அப்பாவி தொண்டர்கள் வெளியில் சொல்ல முடியாமல் வேதனையில் தவிக்கின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் விஜய் சாடினார்.
அதிமுக தலைவர்களை ஒருபிடிபிடித்த விஜய்,  அதிமுகவின் கொள்கைகள், சித்தாந்தங்கள் மற்றும் முன்னாள் தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை புகழ்ந்து தள்ளினார்.  இதன் மூலம் அதிமுகவின் வாக்குகளை மடைமாற்ற முடியும் என்று விஜய் நம்புகிரார். தமிழகத்தில் 2வது பெரிய கட்சியான அதிமுக பெரும் வாக்கு வங்கியை கொண்டுள்ளது. ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக பல அணிகளாக சிதறி, மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக ஒரு தோற்றம் உள்ளது. அதற்கேற்ப ஆட்சியை இழந்த பின் எந்த தேர்தலிலும் அதிமுக கணிசமான வெற்றியை பதிவு செய்யவில்லை.
அதிமுக வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்யவே, அக்கட்சியினரின் உணர்வுகளை மதித்து பேசி, அதன் தலைவர்களை விஜய் விமர்சனம் செய்துள்ளார். மதுரை மாநாட்டில் விஜய்க்கு கூடிய கூட்டத்தை பார்த்து, தமிழக அரசியல் கட்சிகள் உண்மையில் திகைப்பில் உள்ளன. நடிகரை பார்க்க வந்த கூட்டம் என்று அலட்சியாக இருந்துவிட முடியாது என்பதை திமுக தலைமை உணர்ந்துள்ளது.
கூட்டம் எல்லாம் எப்படி ஓட்டாக மாறும் என்று நம்மை விமர்சிக்கின்றனர். தப்புக் கணக்கு போடாதீர்கள். இந்த கூட்டம் வெறும் ஓட்டாக இருக்காது. மக்கள் விரோத ஆட்சிக்கு வைக்கும் வேட்டாக, எங்களை கோட்டைக்கு அனுப்பும் ரூட்டாக இருக்கும் என்று டி.ராஜேந்தர் பாணியில் மேடையில் வீர வசனம் பேசினார் விஜய்.
ஆனால், விஜயின் மாநாட்டு குறித்த எதிர்மறையான விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. தமிழகத்தில் மாநாடு  என்றாலே திருவிழா போல் இருக்கும். கண்கவர் அலங்காரங்களுடன் பந்தல், பலவண்ண மின் விளக்குகள், சுடச்சுட அசைவ பிரியாணி என வயிற்றுக்கும் குறைவிருக்காது; மனதிற்கும் குறைவிருக்காது. அதேபோல் அதிமுக- திமுக எவ்வளவு கூட்டங்களை கூட்டினாலும் அவர்களிடம் எழுச்சி இருக்குமே தவிர, கட்டுக்கோப்பு ஒருபோதும் குறையாது.
ஆனால், விஜய் மாநாட்டில் அப்படி எதுவும் இல்லை. மொட்டை வெயிலில் திறந்த வெளியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்த தொண்டர்களுக்கு தண்ணீர் வசதி மட்டுமே செய்யப்பட்டிருந்தது. தண்ணீர் தொட்டிகள், குழாய்களையும் தொண்டர்கள் துவம்சம் செய்திருந்ததால் அதுவும் கிடைக்கவில்லை.
விஜையின் ரசிகர்களாகவே மாநாட்டுக்கு பலரும் வந்திருந்தனர். மாநாட்டின் நோக்கம் என்ன, கொள்கை – கோட்பாடுகள் என்ன, தேர்தல் நிலைப்பாடு என்ன என்பது பற்றி அவர்களுக்கு துளியும் கவலை இல்லை. குறைந்தபட்சம் விஜய் என்ன பேசுகிறார் என்பதை கேட்கும் மன நிலையில் தவெகவினர் இல்லை.
மாநாட்டின் தொடக்கத்திலேயே விஜயின் ராம்ப் வாக் முடிந்தது. ரசிகர்கள் விஜயை காணும் ஆர்வலத்தில் இரும்பு தடுப்புகள், சேர்களை உடைத்தெறிந்து அவரை காண முண்டியடித்தனர். அவர் ராம்ப் வாக் சென்ற மேடையில் ஏறி, அவரை சூழ முற்பட்டனர். இதனால் என்னவாகுமோ என்ற பதற்றம் தொற்றிக் கொண்டது.  மின் விளக்கு கோபுரங்களில் அமர்ந்து கொண்டு விபரீத சாகசங்கள் செய்வது, பிளாஸ்டிக் சேர்கள், தடுப்புகளை உடைத்து நொறுக்குவது, பச்சை நிற தரை விரிப்புகளை சுருட்டிக் கொண்டு செல்வது என எல்லாமே, விஜய்க்கு கூடும் கூட்டத்தினரின் முதிர்ச்சியின்மையை காட்டியது.
விஜயை நேரில் பார்த்ததும், மாநாட்டில் பாதி கூட்டம் கலையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் இதனை மேடையில் இருந்த விஜய், ஆதவ் அர்ஜூன் உட்பட நிர்வாகிகள் கவலையுடன் கவனித்தனர். நிர்வாகிகள் பேசினால், இருக்கும்  கூட்டமும் கலைந்துவிடும் என்பதால், முக்கிய பேச்சாளர்களை சில நிமிடங்களில் பேசி முடிக்க உத்தரவிட்டார் விஜய்.
பிரம்மாண்டமாக  மாநாடு என்று சொல்வதில் என்ன சிறப்பு இருக்கிறது? கட்டுக்கோப்பாக தொண்டர்களை தக்க வைக்க முடியவில்லையே என்ற கருத்தை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர். தவெக மாநாடு முடிந்த அந்த திடல் பகுதி முழுவதுமே குப்பைகள் குவிந்து கிடந்தன. வாட்டர் பாட்டில்கள் பிளாஸ்டிக் பைகள், காகிதங்கள், சாப்பாட்டு தட்டுகள், கரும்பு சக்கைகள் என அப்பகுதியே குப்பைக்கூளமாக இருந்தது. நாளை விஜய் வெற்றி பெற்று சட்டசபைக்கு போனால், அங்கும் விஜய் ரசிகர்கள் இப்படித்தான் அலங்கோலம் செய்வார்களா என்ற கேள்வியை சிலர் எழுப்பினர். இதெல்லாம் மாநாட்டால் தவெகவுக்கு ஏற்பட்டுள்ள சறுக்கல்களாகவே பார்க்க முடிகிறது.
எனினும் விஜய்க்கு தன்னெழுச்சியாக கூடிய கூட்டம், உண்மையில் பிரமிக்க வைக்கிறது. இளம் தலைமுறையினர் மத்தியில் உள்ள செல்வாக்கை, தேர்தல் வாக்காக மாற்ற வேண்டுமென்றால், வரும் 6 மாதங்களில் அவர் கடுமையாக உழைக்க வேண்டும். ஒர்க் ஃபிரம் ஹோம் அரசியல்வாதியாக இல்லாமல், களத்திற்கு வந்து மக்களை விஜய் சந்திக்க வேண்டும்; மக்களின் பிரச்சினைகளுக்கு அவர் போராட வேண்டும். அப்படிச் செய்தால், தமிழக அரசியல் களத்தில் முக்கிய சக்தியாக விஜய் ஜொலிக்கலாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon