எனக்கு மட்டும் அதிகாரங்கள் – பாமக செயற்குழு கூட்டத்தில் உறுதியாக சொன்ன ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று திண்டிவனத்தில் கூடியது. இதில், அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே. மணி உட்பட கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தச் செயற்குழுக் கூட்டத்தில், தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளிட்டவை அக்கட்சி நிறுவனர் ராமதாஸுக்கு வழங்கப்பட்டது.
இவற்றோடு சேர்ந்து பாமக செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாமகவின் செயற்குழு கூட்டத்தில் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதியும் வந்திருந்தார். கூட்டம் துவங்கி நடைபெற்றுவந்தபோது, திடீரென அவர் மேடைக்கு அழைக்கப்பட்ட ராமதாஸின் பின்னால் இருக்கை இடப்பட்டு அமரவைக்கப்பட்டார். இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் செயற்குழு மற்றும் இதற்கு முன்னதாக நடந்த நிர்வாகக் குழு மூலம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் எனக்கு மட்டுமே இருக்கிறது. பாமகவில் வேட்பாளர் தேர்வு செய்யும் பணி துவங்கிவிட்டது. எனவே விருப்ப மனு கொடுக்க தயாராகுங்கள்.
2026 தேர்தலை கூட்டணியில் இருந்துதான் சந்திக்க முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். பாமகவின் இளைஞர் அணி தலைவராக ராமதாஸின் மகள் வழி பேரன் முகுந்தன் நியமிக்கப்பட்டதில் இருந்துதான், நிறுவனர் ராமதாஸுக்கும், கட்சித் தலைவர் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முதலில் பொதுவெளியில் வந்தது.
பின்னர் பல்வேறு தொடர் சம்பவங்களில் இருவருக்கும் இடையேயான பிரச்சனைகள் பகிரங்கமாக பொதுவெளியில் வெளியாகின.இன்றையச் செயற்குழு கூட்டத்தில் திடீரென மேடையில் ஏற்றப்பட்டு, ராமதாஸ் இருக்கைக்கு பின்னால் இருக்கை இடப்பட்டு அமரவைக்கப்பட்ட அவரின் மகள் ஸ்ரீகாந்திமதிதான் முகுந்தனின் தாய் என்பது கவனிக்க வேண்டியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




