--- --:--:-- --

சேலத்தில் இன்று அன்புமணி பொதுக்குழு கூட்டம்..!

1

பாமகவில் நிறுவனர் ராமதாசும், தலைவர் அன்புமணி ராமதாசும் இரு பிரிவுகளாக செயல்பட்டு வரும் நிலையில் கட்சித் தொண்டர்கள் பெரிதும் குழப்பம் அடைந்துள்ளனர். பல முக்கிய நிர்வாகிகள் அன்புமணியின் பக்கம் உள்ள நிலையில் குறிப்பிட்ட தரப்பினர் நிறுவனர் ராமதாசுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.

 

அன்புமணி தரப்பு நிர்வாகிகளை ராமதாஸ் நீக்குவதும் அவர்களை அன்புமணி மீண்டும் நியமிப்பதாக அறிவிப்பதும் தொடர்ந்து வருகிறது. அன்புமணி மீதும் அவரது மனைவி மீதும் ராமதாஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அன்புமணி ராமதாஸோ தான் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியின் அழைப்பிதழில் ராமதாஸ் புகைப்படத்தை போடாமல் தவிர்க்கிறார்.

 

ஆனால் அவ்வப்போது நிகழ்ச்சிகளில் தந்தையிடம் மன்னிப்பு கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஆனால் தைலாபுரத்தில் இருக்கும் ராமதாஸோ அதற்கு செவிசாய்ப்பதாக இல்லை. மாறாக, தான் இருக்கும் வரை தான்தான் பாமகவின் தலைவர் என்றும் அன்புமணிக்குத் தலைமைப் பண்பு இல்லை என்றும் கூறி வருகிறார்.

 

நிறுவனர் ராமதாஸுக்கு ஆதரவாகவே கவுரவரத் தலைர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் போன்றோர் செயல்பட்டு வருகிறார்கள். இந்தச் சூழலில் கட்சியில் தன் பலத்தை உறுதிப்படுத்தவும், ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும் மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டங்களை அன்புமணி நடத்தத் தொடங்கியிருக்கிறார்.

 

அவ்வகையில் சேலத்தில் இன்று முற்பகலில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்துக்கு அன்புமணி அழைப்பு விடுத்திருக்கிறார். பிற்பகலில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார்.

 

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தின் பென்னாகரம் தொகுதி எம்எல்ஏவும் கட்சியின் கவுரவத் தலைவருமான ஜிகே மணிக்கு நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபோல, பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ-வான அருளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

 

சென்னைத் தலைமைச் செயலகத்திற்கு நேற்று வந்த அவர் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்து விட்டு வெளியே வந்தபோது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஜி.கே. மணியும், அருளும் அன்புமணி ஏற்பாடு செய்யும் எந்தக் கூட்டத்திற்கும் வருவதில்லை.

 

அதேநேரத்தில், ராமதாஸ் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். கடந்த முறை அன்புமணி ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கேற்காத அருள், வயிற்று உபாதை எனக் கூறி சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், அருளை தங்கள் பக்கம் ஈர்த்துவிட அன்புமணி தரப்பு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்த பின்னணியில் அருள், உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டார். இவரும் ஜி.கே. மணியும், அன்புமணி கூட்டத்தில் பங்கேற்பதை திட்டமிட்டு தவிர்ப்பதற்காகவே பல்வேறு காரணங்களைக் கூறுவதாக மாற்று முகாமினர் முனுமனுக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon