இனி வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை..!
பொதுவாக, அனைத்து வங்கிகளிலும் ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், அதற்கு தனி அபராதம் விதிக்கப்படும். இது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்.இந்த நிலையில், கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்பு வைக்காவிட்டால் இனி அபராதம் விதிக்கப்படாது என்று அந்த வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக கனரா வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜூன் 1ஆம் தேதி முதல் கனரா வங்கியில் அனைத்து வகையான சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் சேமிப்புக் கணக்குகளுக்குக் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்கவில்லை என்று அபராதம் விதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் நகர்ப்புறம் மற்றும் மெட்ரோ நகரக் கிளைகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்பாக ரூ.2,000, மற்ற நகரங்களில் ரூ.1,000 குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
குறைந்தபட்ச இருப்பை வைக்காதவர்களுக்கு 25 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது அந்த நடவடிக்கையை முழுவதுமாகக் கைவிடுவதாக கனரா வங்கி அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




