--- --:--:-- --

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு..!

2

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், நேற்று கடைவீதிகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது.

 

36 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்களை வரவேற்கத் தயாராக உள்ளன. விடுமுறை முடிந்து பள்ளிக்குச் செல்வதற்கும், நண்பர்களைக் காண்பதற்கும் ஆர்வமுடன் இருப்பதாகக் குழந்தைகள் கூறினர்.

 

பள்ளி செல்வதற்குத் தேவையான சீருடை, பை, நோட்டுப் புத்தகங்கள், ஷூ உள்ளிட்ட பொருள்களை வாங்கக் கடைவீதிகளில் பெற்றோர்களுடன் மாணவர்கள் குவிந்தனர். இதனால், தஞ்சை, திருப்பூர், கோவில்பட்டி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் கடைவீதிகளில் விற்பனை களைகட்டியது.

 

இதனிடையே, கோடை விடுமுறையைக் கழிக்கச் சொந்த ஊர்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் சென்றவர்கள் மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பியதால் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
மதுரை ரயில் நிலையத்தில் சென்னைக்கு வரும் பாண்டியன் விரைவு ரயிலின், முன்பதிவில்லாப் பெட்டியில் இடம் பிடிக்க மக்கள் ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர்.

 

ஆனால், ரயில்வே அதிகாரிகள், காவல்துறையினருக்குத் தெரிந்த நபர்களை, முன்கூட்டியே ரயிலில் ஏறியிருந்ததைக் கண்டு, வரிசையில் காத்திருந்த பயணிகள் ரயில்வே காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த தன்னார்வலர் பயணிகளைத் தள்ளிவிட்டதாகக் குற்றம் சாட்டினர். இ

 

தையடுத்து, ஏற்கனவே ரயிலில் இருந்தவர்கள் கீழே இறக்கிவிடப்பட்டு, வரிசையில் காத்திருந்தவர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். இதே போல, நெல்லையில் முழுவதும் முன்பதிவில்லாத அந்தியோதயா ரயிலில் ஏற மக்கள் முண்டியடித்தனர்.தென் மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கார்களில் சென்னை நோக்கித் திரும்பியதால் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

 

இதே போல, ஜிஎஸ்டி சாலையில் உள்ள பல சுங்கச்சாவடிகளில் நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து சென்றனர்.இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் பள்ளி சீருடைகள் இன்றே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்களை உற்சாகத்துடன் வரவேற்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon