அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: மோடி
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, பிரதமர் மோடி திங்கள்கிழமை இரவு முதன்முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், பாகிஸ்தானிலிருந்து வரும் பயங்கரவாதத்தை தடுக்க இந்தியா புதிய எல்லைகளை வகுத்துள்ளது என்றார்.
மேலும், தாக்குதலில் பாகிஸ்தான் சேதமடைந்த பின் உலக நாடுகளிடம் முறையிட்டதால், ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையை இந்தியா தற்காலிகமாக நிறுத்திவைத்திருப்பதாகவும், பாகிஸ்தானின் செயல்பாடுகளை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார்.”நாம் ஒரு புதிய நடைமுறையை உருவாக்கியுள்ளோம்.
‘ஆபரேஷன் சிந்துர்’ என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான நமது கொள்கை. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால், நாம் தக்க பதிலடி கொடுப்போம். பயங்கரவாதத்தின் வேர்கள் எங்கிருந்து துளிர்க்கின்றனவோ, அந்த இடங்கள் அனைத்திலும் நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசாங்கத்தையும், பயங்கரவாத அமைப்புகளையும் நாம் வேறுபடுத்திப் பார்க்க மாட்டோம்” என்று மோடி கூறினார். இந்த தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் நம்பிக்கையற்ற நிலையில் இருப்பதாக கூறிய மோடி, இந்த சூழலில் அவர்கள் மற்றொரு தவறான முயற்சியை மேற்கொண்டனர் என்று குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிப்பதற்கு பதிலாக, நமது பள்ளிகள், கோயில்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் இராணுவ நிறுவுதல்களைத் தாக்கத் தொடங்கினர்.
ஆனால், அது அம்பலமானது. நமது வலுவான வான் பாதுகாப்பு அமைப்பின் முன் அவர்களின் ட்ரோன்களும் ஏவுகணைகளும் எப்படி தகர்க்கப்பட்டன என்பதை உலகம் பார்த்தது. பாகிஸ்தான் எல்லைத் தாக்குதலுக்கு தயாராக இருந்தது, ஆனால் நாம் அவர்களின் நெஞ்சில் தாக்கினோம். அவர்களின் பெருமைக்குரிய பாகிஸ்தான் விமான தளங்களை நமது ஏவுகணைகளும் ட்ரோன்களும் சேதப்படுத்தின.
3 நாட்களில், பாகிஸ்தான் எதிர்பார்க்காத அளவிற்கு இந்தியா பதிலடி கொடுத்தது என்று மோடி கூறினார். எனவே, பதற்றத்தை குறைக்க பாகிஸ்தான் உலக நாடுகளிடம் கெஞ்சியது. அதற்குள், அவர்களின் பயங்கரவாத உள்கட்டமைப்பை நாம் சேதப்படுத்தினோம்.
அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்த நாடு வாக்குறுதி அளித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலித்து நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என்று பிரதமா் மோடி கூறினாா்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




