--- --:--:-- --

பாஜகவுடன் கூட்டணி என்றால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என கூறவில்லை – ஜெயக்குமார்

1

“பாஜகவுடன் கூட்டணி என்றால் விலகுவேன் என்று கூறவில்லை” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். அதிமுக பாஜக கூட்டணி சமீபத்தில் உறுதியானது. இந்நிலையில் கும்பகோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “அதிமுக கூட்டணியை அமித் ஷா தலைமை தாங்கி அறிவிக்கிறார்.

 

அதிமுகவை பழனிசாமி தலைமை தாங்குகிறார் என்றால், அவர் தான் கூட்டணியை அறிவித்து இருக்க வேண்டும். அப்படி அறிவித்து இருந்தால், பழனிசாமி சுதந்திரமாக முடிவு எடுத்து இருக்கிறார் என நம்ப முடியும். அதிமுக கூட்டணியில் அவர்களின் தொகுதியை பறித்து, அதில் பெறும் வாக்குகளைத் தங்களின் வாக்குகள் என பாஜக கூற நினைக்கிறது.

 

அதிமுகவை மெல்ல மெல்ல தேய நினைப்பது தான். ஒரு பெரிய திராவிட இயக்கமான அதிமுகவை அழித்து விட்டால், அடுத்தப் பெரிய சக்தியான திமுகவை வீழ்த்தி விட முடியும். ஒட்டுமொத்தமாகப் பெரியாரின் அரிசுவடிகளை அழித்து விட முடியும் எனக் கணக்குப் போடுகிறார்கள்.” என்று பேசினார். இந்நிலையில், அதிமுக பாஜக கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பாஜக கூட்டணி அமைந்தால் தான் அதிமுகவில் இருந்து விலகுவதாக கூறியிருந்ததாக திருமாவளவன் பேசியிருக்கிறார்.

 

அதுபோன்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. திருமாவளவன் திட்டமிட்டு இதுபோன்று செய்தியை பரப்பி வருகிறார்.” என்று தெரிவித்தார்.மேலும் பேசிய ஜெயக்குமார், “வேண்டும் என்றே சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

 

பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றது கிடையாது. என் குடும்பமும் பதவிக்காக வாசல் கதவைத் தட்டியது கிடையாது. என் உயிர் மூச்சு என்றால் அது அதிமுகவுக்குத்தான்” என்று பதிலளித்துள்ளார். சித்திரை திருநாள் பற்றி பேசிய ஜெயக்குமார், “சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட வேண்டும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அதனை அறிவித்தார்.” என்றார்.

Right Menu Icon