எலான் மஸ்க்கின் அறிவிப்பை உறுதி செய்த டிரம்ப்..!
இந்தியா மிகவும் பணக்கார நாடு என்றும், அங்கு வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க நாங்கள் ஏன் நிதியளிக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்காவின் US AID திட்டத்தின் மூலம், 1951-ஆம் ஆண்டு முதல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஏழை நாடுகள் நிதி பெற்று வருகின்றன. எய்ட்ஸ் விழிப்புணர்வு, குழந்தைகளின் நலன், பெண்கள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் USAID மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதேபோல், இந்தியாவில் வாக்கு சதவிகிதத்தை உயர்த்த 182 கோடி ரூபாய் நிதி அளித்ததாகவும், இதனை உடனடியாக நிறுத்த உள்ளதாகவும் அமெரிக்க அரசின் திறன் துறைத் தலைவர் எலான் மஸ்க் அறிவித்திருந்தார். மஸ்க்கின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவில் யார் இந்த நிதியை பெறுகிறார்கள் என்று பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சாயல் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனால் காங்கிரஸ்- பாஜக இடையே பெரும் வார்த்தை போரும் மூண்டது.இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து விளக்கம் அளித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவிடம் அதிக பணம் இருப்பதாக கூறியுள்ளார். இந்தியாவில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க நாங்கள் ஏன் நிதியளிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலக அளவில் அதிகம் வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் டிரம்ப் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி நல்ல நண்பர் தான் என்றாலும், அதற்காக நிதி எல்லாம் கொடுக்க முடியாது என்றும் டிரம்ப் காட்டமாக கூறியுள்ளார்.ஆந்திராவைச் சேர்ந்த வீணா ரெட்டி, 2021-ஆம் ஆண்டில் USAID-ன் இந்திய தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, இந்தியா வந்த அவர், 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை டெல்லியில் தங்கியிருந்தார். வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க அமெரிக்கா நிதி அளித்ததாக கூறப்படும் நிலையில் வீணா ரெட்டி இந்தியாவில் என்ன செய்தார் என விசாரணை நடத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. இதேபோல், காங்கிரஸ் கட்சியும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.





