அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் ..!
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்துள்ள தொங்குட்டிபாளையத்தில் அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது.
விழாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கேலரி, வாடிவாசல், காயம் பட்டவர்களை மீட்டு முதலுதவி செய்யும் அறைகள், காளைகள் பாதுகாப்பாக வெளியேறும் பகுதிகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கடந்த 16ஆம் தேதி மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது.
ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பல விஐபிகளின் காளைகள் உள்பட 800 காளைகள் கலந்து கொண்டன. மாடுகளை அடக்கி பிடித்து வீரத்தை காட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 600 மாடுபிடி வீரர்கள் வந்து பங்கேற்றுள்ளனர். மாடுபிடி வீரா்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.
மருத்துவ பரிசோதனையின் போது மாடுபிடி வீரர்களிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போட்டியில் ஜல்லிக்கட்டின் போது மாடுபிடி வீரர்கள் கீழே விழுந்தால் காயமாடுபிடி வீரர்கள் லாவகமாக தப்பிப்பதற்காக இரண்டு பக்கமும் இரும்பு கிரில் கேட் அமைக்கப்பட்டு இருந்தது.

ஜல்லிக்கட்டு பார்க்க வரும் பார்வையாளர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் பிரம்மாண்டமான கேலரி வசதியும், அவர்களது வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன நிறுத்தும் இடம் மற்றும் வசதி செய்யப்பட்டு இருந்தது. வாடிவாசல் பகுதியில் வீரர்களுக்கு அடிபடாமல் இருப்பதற்கு தென்னை நார் கழிவுகள் கொட்டி சமன்படுத்தப்பட்டு இருந்தது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், ஆகியோர் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் முன்னிலையில் போட்டிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
தொடர்ந்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் தலைமையில் அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு அரசுத்துறை அலுவலர்கள், வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க நிர்வாகிகள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரீஸ் அசோக், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், திருப்பூர் மாநகராட்சி 4 வது மண்டல தலைவர் பத்மநாபன், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) பிரகாசம், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் சரவணன், அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க கௌரவ தலைவர் பாலுசாமி மற்றும் அரசு அலுவலர்கள் ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க நிர்வாகிகள் பல திரளாக கலந்து கொண்டனர்.
போட்டியில் பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் மடக்கி பிடித்த வீரர்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் திருப்பூர் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் மற்றும் திருப்பூர் மாநகர மக்கள் என பல்லாயிரம் பேர் கலந்து கொண்டு மாடுபிடி வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்ததும், கைதட்டியும் ரசித்தனர். பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.





