45 கிலோவாக எடையை குறைத்த நடிகை சாரா அலி கான்..!
தனது கவர்ச்சி மற்றும் நடிப்புத் திறமைக்காகக் கொண்டாடப்படும் பாலிவுட் நடிகை சாரா அலி கான், தனது எடை இழப்பு பயணம் குறித்து வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். தான் 96 கிலோ எடை இருந்ததாகவும், இதனால் ஏராளமான உடல்நல சவால்களை எதிர்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இருப்பினும், அசைக்க முடியாத உறுதியுடன் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் 45 கிலோவிற்கு மேல் எடையைக் குறைத்து, தனது உடலை ஸ்லிம்மாக மாற்றியுள்ளார். 96 கிலோகிராம் எடை இருந்தபோது சுயமரியாதை பிரச்சனைகளை எதிர்த்துப் போராடியதாகவும், எண்ணற்ற விமர்சனங்களை சந்தித்ததாகவும் சாரா கூறினார்.
தனது எடையால் தனக்கு ஏற்பட்ட உணர்ச்சிப் பாதிப்பைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். அதில், தனது மன ஆரோக்கியம், ஹார்மோன் சமநிலை மற்றும் தன்னம்பிக்கை அனைத்தும் பாதித்ததாக விளக்கியுள்ளார். “நான் மீண்டும் 60 கிலோகிராம் எடையைத் தொட்டபோது நம்பிக்கையுடன் மேலும் உடல் எடையை குறைக்க முயற்சி செய்தேன்” என்றார்.
45 கிலோ எடை குறைப்பிற்குப் பின்னால் உள்ள ரகசியங்களை கூறிய சாரா, “திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தான் நான் உடல் எடையை விடாமுயற்சியுடன் குறைக்க காரணம். அவர் தனது படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைக்குமாறு வலியுறுத்தினார். அவர் என் எடையில் பாதியைக் குறைக்கச் சொன்னார்.
அதுதான் எனக்குத் தேவையான உந்துதலை தந்தது” என்று அவர் விளக்கியுள்ளார்.”இந்த உந்துதல் உடல் எடையை குறைக்க தேவையான பாதையை அமைத்தது என்றே கூறலாம். எனினும் எனது உடல் எடை குறைப்பு பயணம் தடைகள் இல்லாமல் இல்லை. அன்றாட உணவுமுறையில் ஏற்படுத்திய மாற்றங்கள் உடல் எடை குறைப்பு முயற்சியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் தோற்றத்தை அதிகமாக பாதிக்கின்றன என்பதை நான் உணர்ந்தேன். அவை ஹார்மோன்கள், மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பாதிக்கின்றன.” என்று சாரா குறிப்பிட்டார்.”எனவே கவனத்துடன் சாப்பிடுவதையும், சமச்சீரான உணவின் முக்கியத்துவத்தையும், பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதங்களை தனது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் நாம் உணர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். கூடுதலாக தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சிகளையும் இணைத்துக் கொண்டேன்.
அதில் கார்டியோ மற்றும் யோகா ஆகியவையும் அடங்கும். மேலும் நடனம் பயனுள்ள பயிற்சியாகவும் செயல்பட்டது. நடனம் எனக்கு உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் உதவியது. அது மன ஆரோக்கியத்திற்கு சிகிச்சையளிப்பதாகவும் இருந்தது” என்று அவர் கூறியுள்ளார்.இந்த நீடித்த போராட்டத்தைப் பற்றிய அவரது வெளிப்படையான கருத்து, எடை இழப்பு என்பது வெறும் உடல் ரீதியான மாற்றம் மட்டுமல்ல, மன ரீதியான மாற்றமும் கூட என்பதை நினைவூட்டுகிறது.
இன்று, உடல் எடையை குறைக்க போராடும் பலருக்கு சாரா ஒரு உத்வேகமாக இருக்கிறார். “தற்போது நான் அழகாக இருப்பதாக மட்டுமின்றி, நன்றாக இருப்பதாகவும் உணர்கிறேன்” என சாரா தனது பயணம் குறித்து பேசியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




