--- --:--:-- --

சென்னைக்கு 500 கி.மீ அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!

2

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கலாம் என்றும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிலவரப்படி, விசாகபட்டினத்திற்கு தெற்கு-தென்கிழக்கே சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது, அடுத்த 12 மணி நேரத்தில், கிழக்கு-வடகிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மெதுவாக நகர்ந்து, அதன் பிறகு, படிப்படியாக வலுவிழக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குனர் பா. செந்தாமரை கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், நேற்று, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை 5.30 மணி அளவில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று  8.30 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், விசாகபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும், கோபல்பூரிற்கு (ஒரிசா) தெற்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது, அடுத்த 12 மணி நேரத்தில், கிழக்கு-வடகிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மெதுவாக நகர்ந்து, அதன் பிறகு, கடலில் படிப்படியாக வழுவிழக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon