தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடவில்லை – துணை முதல்வர் உதயநிதி விளக்கம்
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் ஆலோசனைக் கூட்டங்கள் அவ்வப்பொழுது அந்தத்துறை அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திட்டம் மற்றும் செயலாக்கத்துறை சார்பில் இன்று காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
தமிழ்நாடு அரசு விழாக்கள் மற்றும் துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இன்றைய சிறப்பு திட்டம் மற்றும் செயலாக்கத்துறை ஆலோசனைக் கூட்டத்தின் துவக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அப்போது திடீரென குறுக்கிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் இருந்து பாடுங்கள் என்று தெரிவித்தார். இதனால் மீண்டும் அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இந்தத் தகவல் வெளியே வந்ததும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு ஆலோசனை கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பிழையாக பாடப்பட்டது என பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்த்தாய் வாழ்த்தை யாரும் தவறாக பாடவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது திடீரென மைக்கில் கோளாறு ஏற்பட்டு அவர்கள் பாடிய சில சொற்கள் கேட்காமல் போனது. அதனால், உடனடியாக மீண்டும் அவர்களை தமிழ்த்தாய் வாழ்த்தை பாட வைத்தோமே தவிர அவர்கள் தவறாக பாடினார்கள் என்பதற்காக அல்ல” என விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் ஆளுநர் பங்கேற்ற சென்னை டிடி பொன்விழா மற்றும் இந்தி மாதம் நிறைவு விழா, விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்’ எனும் வரி மட்டும் விடுபட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் தரப்பிலும், டிடி தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது என்பது நினைவுக்கூரத்தக்கது.
அதேபோல் உதயநிதி ஆலோசனைக் கூட்டத்திலும், ‘கண்டமிதில்’ என்பதை ‘கண்டமதில்’ என்று நிகழ்ச்சிக்கு முன்னர் செய்தித்துறை அலுவலர்கள் பாடினர். தவறு நடந்தது என தெரிய வந்ததும் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்தை துணை முதலமைச்சர் பாட வைத்தார். இரண்டாவது முறை பாடும் போது புகழ் மணக்க என்பதை திகழ் மனக்க என்று தவறாக பாடியதாகவும் சொல்லப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




