--- --:--:-- --

இந்தியாவின் பாதுகாவலர் சீதாராம் யெச்சூரி மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்

1

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக செயலாற்றிவந்த சீதாராம் யெச்சூரி (72) சிகிச்சைப் பலனின்றி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகக் கடந்த 2015-ம் ஆண்டு முதல் சீதாராம் யெச்சூரி செயல்பட்டு வந்தார். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அக்கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும். அந்தவகையில், கடந்த முறை நடைபெற்றத் தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக அந்தப் பொறுப்பில் செயல்பட்டுவந்தார்.

 

கடந்த மாதம் 19-ம் தேதி நிமோனியா காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், இன்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானார். இவரது மறைவிற்கு தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.பிரதமர் மோடி, “சீதாராம் யெச்சூரியின் மறைவு வருத்தமளிக்கிறது.

 

அவர் இடதுசாரிகளின் ஒளிக்கீற்றாக இருந்தார். அரசியலில் அனைவரையும் இணைக்கும் திறனுக்காகவும் அறியப்பட்டவர். திறமையான நாடாளுமன்ற உறுப்பினராக முத்திரை பதித்தவர். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் கட்சியினருடனும் உள்ளன”எனத் தெரிவித்துள்ளார்.

 

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் ராஜ்யசபா எம்பியுமான சீதாராம் யெச்சூரியின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரின் நீண்ட பொது வாழ்வில் தனது அறிவு மற்றும் உச்சரிப்புக்காக அறியப்பட்ட ஒரு அனுபவமிக்க பாராளுமன்ற உறுப்பினராக தன்னை வேறுபடுத்திக் கொண்டார்.

 

எனது நண்பரான அவருடன் நான் பல முறை கலந்துரையாடியுள்ளேன். அவருடனான கலந்துரையாடல்களைத் தற்போது நினைவுகூருகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என தெரிவித்துள்ளார்.

Right Menu Icon