தமிழகத்தில் 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை..!
தமிழகத்தில் வரும் 13ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது.
வடக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 8:30 மணியளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.இது வடக்கு திசையில் நகர்ந்து இன்று 8ஆம் தேதி வாக்கில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில், மேற்கு வங்காளம், வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.இந்நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.





