--- --:--:-- --

மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா !

10

தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஓம் பிர்லா மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. பாஜக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்க்கட்சிகள் சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிட்டனர்.

 

18 ஆவது மக்களவையில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்கும் பொருட்டு இடைக்கால சபாநாயகராக பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், 8 முறை எம்பியாக இருந்த காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷை நியமிக்க வலியுறுத்தி வந்தது.

 

இந்நிலையில், மக்களவைத் தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படும் மரபை பின்தொடர காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்பு கொண்டு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆதரவு கோரினார்.

 

ஆனால், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தர வேண்டும் என இந்தியா கூட்டணி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை பாஜக ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 2 ஆவது முறையாக சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா மனுத்தாக்கல் செய்தார். அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்தல் நடைப்பெற்றது. இதில் ஓம் பிர்லா பெரும்பானமையானோரின் வாக்குகளை பெற்ற நிலையில், மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon