அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை..!
அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் பாம்பன் 7, மானாமதுரை , தாளவாடி , மக்கினம்பட்டி தலா 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருந்தது. அதிக பட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36° – 39° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34° – 37° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22° –29° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 37.4° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.4° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்றும், வரும் 16 ஆம் தேதியும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




