--- --:--:-- --

தமிழகத்தில் உச்சபட்ச வெயில் பதிவு..!

10

தமிழ்நாட்டில் கோடை தொடங்கியது முதல் சேலம், ஈரோடு, கரூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனல் காற்று வீசி வருகிறது. குறிப்பாக, கத்தரி வெயிலுக்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் வாட்டி வதைக்கிறது.

 

இதனால், நடப்பு ஆண்டில் இல்லாத அளவிற்கு நேற்று ஒரேநாளில் 20 இடங்களில் வெயில் சுட்டெரித்தது. இதில், அதிகபட்சமாக கரூர் பரமத்தி மற்றும் வேலூரில் தலா 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

ஈரோடு மற்றும் திருச்சியில் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதே போல, திருத்தணியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும், சேலம் மற்றும் தருமபுரியில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் தகித்தது. அத்துடன், திருப்பத்தூர், மதுரை நகரம், மதுரை விமான நிலையம், நாமக்கல் மற்றும் தஞ்சாவூரில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் வாட்டியது.

 

சென்னை விமான நிலையத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், கடலூர், பாளையங்கோட்டை மற்றும் கோவையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் சுட்டெரித்தது. சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் நாகையில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்பதால், வெப்ப அலை வீசும் எனவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், வடதமிழ்நாடு உள் மாவட்டங்களான ஈரோடு, சேலம், தருமபுரி, கரூர், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் நண்பகல் நேரத்தில் வெளியே வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

அதேவேளையில், மே மாதம் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் வெப்பம் சற்று குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் உதகையில் அதிக வெப்பம் காணப்பட்ட நிலையில், கடந்தாண்டு போதிய மழையின்மையே உதகையில் வரலாறு காணாத வெப்பம் ஏற்படுவதற்கான காரணம் என சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், பருவமழை முன்கூட்டியே தொடங்குமா? என்பதை மே மாத இறுதியில் தான் கணிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.இதனிடையே, இந்திய அளவில் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பம் பதிவானதில் கரூர் பரமத்தி 6 ஆவது இடத்தில் உள்ளது- இதில், ஆந்திராவின் ரெண்டசிந்தலாவில் நாட்டிலேயே அதிகபட்ச115 டிகிரி பாரன்ஹீட்டும், திருப்பதியில் 114 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவானது. இதையடுத்து, தெலங்கானா கம்மம் பகுதியில் 113 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தகித்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon